உள்ளடக்கத்துக்குச் செல்

சாட் தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, ஏப்பிரல் 30, 2010

சூடான் எல்லையில் போராளிகளின் புதிய தாக்குதல் ஒன்றைத் தமது இராணுவத்தினர் முறியடித்ததாகவும், தமது எதிர்த்தாக்குதலில் 105 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் சாட் நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதனைப் போராளி அமைப்பினர் மறுத்துள்ளனர்.


இரு தரப்பிலும் உயிர்ச்சேதங்கள் இடம்பெற்றுள்ளதாக FPNR என்ற போராளிக் குழுவின் தலைவர் அடூம் யாக்கூப் தெரிவித்தார். ஆனாலும் அவர் மேலும் விபரங்களைத் தெரிவிக்கவில்லை.


கடந்த பெப்ரவரியில் சூடானும் சாட்டும் தத்தமது நாடுகளில் இயங்கும் போராளிக் குழுக்களுக்கு உதவி செய்வதில்லை என இணக்கம் தெரிவித்ததை அடுத்து இடம்பெற்றுள்ள முதலாவது மோதல் இதுவாகும்.


"முழுப் பகுதிகளையும் எமது இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர்," என சாட்டின் தகவல்தொடர்பு அமைச்சர் கெடல்லா யூனுஸ் தெரிவித்தார். தமது தரப்பில் ஒரு இராணுவ வீரர் இறந்துள்ளதாகவும் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


FPNR குழு யுஎஃப்ஆர் என்ற முக்கிய போராளிக் குழுவில் இருந்து பிரிந்த ஒரு புதிய குழு என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். அரசுடனான பேச்சுக்களை இது எதிர்த்து வந்தது.


சூடானின் தெற்குப் பகுதியான தார்பூரில் போராளிக்குழுக்களுக்கு உதவிகள் புரிவதாக சாட் நாட்டின் மீது சூடான் குற்றம் சாட்டி வந்துள்ளது. இதனையடுத்து சாட் சூடானுடனான தூதரக உறவுகளை முறித்துக் கொண்டது.

மூலம்[தொகு]