சாம்பியாவின் அரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் மைக்கேல் சாட்டா வெற்றி
- 23 செப்டெம்பர் 2011: சாம்பியாவின் அரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் மைக்கேல் சாட்டா வெற்றி
வெள்ளி, செப்டெம்பர் 23, 2011
சாம்பியாவில் இடம்பெற்ற அரசுத் தலைவர் தேர்தலில் சனாதிபதி ரூப்பையா பண்டா எதிர்க்கட்சித் தலைவர் மைக்கேல் சட்டாவிடம் தோல்வியடைந்துள்ளார்.
நான்கு தடவைகள் அரசுத்தலைவர் தேர்தல்களில் கல்ந்து கொண்ட மைக்கேல் சாட்டா 43% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
"சாம்பிய மக்கள் சொல்லியிருக்கிறார்கள், அவர்கள் கூறுவதை நாம் கேட்க வேண்டும். நாம் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்கிறோம்," என ரூப்பையா பண்டா செய்தியாளர்களைச் சந்தித்த போது கூறினார். அவர் சார்ந்துள்ள பலகட்சி சனநாயகத்துக்கான இயக்கம் 20 ஆண்டுகாலமாக ஆட்சியில் உள்ளது.
மைக்கேல் சாட்டாவின் நாட்டுப்பற்றுள்ள முன்னணி ஆதரவாளர்கள் தமது கட்சியின் வெற்றியை வெகு விமரிசையாக வீதிகளில் இறங்கிக் கொண்டாடினர்.
முன்னாளில் லண்டன் விக்டோரியா தொடருந்து நிலையத்தில் துப்பரவுப் பணியாளராகப் பணியாற்றிய திரு சாட்டா பல ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இன்று வெள்ளிக்கிழமை இவர் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளாட்சி, தொழில், மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் அமைச்சுப் பதவிகளை வகித்தார்.
சீனா உட்பட வெளிநாட்டு சுரங்க நிறுவனங்களை இவர் வெகுவாக விமரிசித்து வந்தவர். சுரங்க நிறுவனங்களுக்கு 25% இலாபவரியை மீளவும் அறவிடவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். சாம்பியாவில் 60 வீதத்துக்கும் அதிகமானோர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்கிறார்கள்.
மூலம்
[தொகு]- Zambia election: Banda accepts defeat to Michael Sata, பிபிசி, செப்டம்பர் 23, 2011
- Michael Sata wins Zambian presidential election, கார்டியன், செப்டம்பர் 23, 2011