உள்ளடக்கத்துக்குச் செல்

சுமாத்திராவில் சினாபுங் எரிமலை சீற்றம், ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஆகத்து 29, 2010

இந்தோனேசியாவின் சுமாத்திராவில் சினாபுங் எரிமலை இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உள்ளூர் நேரப்படி 00:08 மணிக்கு சீற ஆரம்பித்ததில், 1,500 மீட்டர் உயரத்திற்கு புகையும் தூசுகளும் கிளம்பின. பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியதாக அதிகாரிகள் அறிவித்தனர்.


சினாபுங் எரிமலை

எரிமலையில் இருந்து கிளம்பிய குழம்புகளை பல கிலோமீட்டர் தொலைவில் உள்ளோர் பார்க்கக்கூடியதாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


சினாபுங் எரிமலை மெதான் என்ற சுமாத்திராவின் முக்கிய நகரத்தில் இருந்து தென்மேற்கே 60 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இது கடந்த 400 ஆண்டுகளாக வெடிக்கவில்லை. கடைசியாக இது 1600 ஆம் ஆண்டில் வெடித்தது.


நேற்று சனிக்கிழமை முழுவதும் இந்த எரிமலையில் இருந்து புகை கிளம்பிக் கொண்டிருந்ததாகவும், ஆனால் அது குறித்து எவ்வித கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. "ஆரம்பத்தில் இந்த புகையும் தூசும் மழை காரணமாகக் கிளம்பியிருக்கலாம் என நாம் நினைத்தோம். ஆனால் அது இப்போது எரிமலையில் இருந்து கிளம்பிய குழம்பே என நாம் உறுதிப்படுத்தியுள்ளோம்."


"நிலைமை இப்போது கட்டுப்பாட்டில் உள்ளது. அவசர நிவாரணப் பணியாளர்கள் அங்கு சென்றுள்ளார்கள்," என அரசுப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். வெளியேறியவர்கள்ளில் சிலர் இப்போது திரும்பி வரத் தொடங்கியுள்ளார்கள். சேத விபரங்கள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.


இந்தோனேசிய தீவுக் கூட்டத்தில் குறைந்தது 129 எரிமலைகள் காணப்படுகின்றன.

மூலம்

[தொகு]