சூரியக் குடும்பத்துக்கு வெளியே 32 புதிய கோள்கள் கண்டறியப்பட்டன

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், அக்டோபர் 20, 2009


புவியும் மற்றைய பல கோள்களும் அடங்கியுள்ள எமது சூரியக் குடும்பத்துக்கு வெளியே சுற்றொழுக்கில் சுற்றி வருகின்ற புதிய கோள்கள் 32 இனை ஐரோப்பிய வானியலாளர்கள் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


ஐரோப்பிய தென் கண்காணிப்பு தொலைநோக்கியின் ஊடாக அவதானித்தததில் இவ் கோள்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவற்றில் எவையும் புவியின் அளவிலோ அல்லது உயிர் வாழக்கூடிய நிலையிலோ இருப்பதற்கான சான்றுகளை தொலைக்காட்டி காட்டவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.


இப்புதிய கோள்கள் அவதானிக்கப்பட்டதுடன் சூரிய மண்டலத்துக்கு வெளியே மொத்தமாக 400 இற்கும் மேற்பட்ட கோள்களை அவதானித்துள்ளதாக ஐரோப்பிய வானிலை ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.


இவற்றில் 6 கோள்கள் புவியை விட பெரியனவாகும். அவை "மிகை பூமிகள்" (Super earth) என அழைக்கப்படுகின்றன. ஏனையவற்றில் பெரும்பாலானவை பூமியை விட சிறியனவாக உள்ளதாகவும் சில வியாழன் போன்று மிகப் பெரிதாக உள்ளதாயும் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


இக்கோள்களின் கண்டறிகையானது கோள்கள் தோன்றியுள்ளதாக கருதப்படும் கொள்கையை பலப்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் புவி போன்ற பல கோள்கள் அண்டத்தில் பரந்திருப்பதை தம்மை நம்வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அறிவியலாளர்கள் "இயற்கை வெறும் வெற்றிடம் இல்லை, அங்கு அண்டம் இருந்தால் அங்கு கோள்கள் பரந்து கிடக்கின்றன" எனவும் தெரிவித்துள்ளனர்.


இந்த 32 கோள்கள் கண்டறியப்பட்டது ஒரு சாதனை என்றும் கோள்கள் கண்டறிவதில் ஐரோப்பிய வானியலாளர்கள் முன்னோடிகள் என்பதை நிரூபித்துள்ளதாகவும் தெரிவித்துள்ள ஐரோப்பிய வானியலாளர்கள் தாம் உயர் துல்லியம் மிக்க ஆரைவேகக் கோள்கள் தேடும் பொறிமுறை கொண்ட சில்லியில் அமைந்துள்ள தொலைநோக்கியால் இவ் கண்காணிப்பை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.


இந்த கண்டறிவைச் செய்தது "ஆர்ப்ஸ்" (HARPS) எனப்படும் தொலைநோக்கி எனவும் இது இதுவரை 75 வரையான வேறு சூரிய மண்டலக் கோள்களை கண்டறிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்