சென்னையில் செம்மொழித் தமிழாய்வு கலந்தாய்வுக் கூட்டம்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சூலை 30, 2009, சென்னை, இந்தியா:


தமிழக முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் சென்னை கடற்கரை காமராசர் சாலையில் உள்ள பாலாறு இல்லத்தில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் ஐம்பெருங்குழு, எண்பேராயக் கலந்தாய்வுக் கூட்டம் 30.7.2009 அன்று நடைபெற்றது.


இக்கூட்டத்தில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவர், தமிழக முதலமைச்சர் கருணாநிதி, மறைந்த தமிழறிஞர் பேராசிரியர் வ.ஐ.சுப்பிரமணியம், பேராசிரியர் கமில் சுவலபில் ஆகியோர் மறைவு குறித்து கொண்டு வந்த இரங்கல் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.


பேராசிரியர் வ.அய்.சுப்பிரமணியம் அவர்களுக்கு நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானத்தில், “தமிழ்ச் செம்மல் வ.அய்.சுப்பிரமணியம் (1926-2009), தம் வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழிக்காகவும், திராவிட மொழியியலுக்காகவும் ஓயாது உழைத்தவர். அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். திராவிட மொழியியல் ஆய்வை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றவர். திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகவும், கேரளப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறைத் தலைவராகவும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராகவும், திராவிடப் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராகவும் சிறப்புடன் பணியாற்றியவர். திருவனந்தபுரம் திராவிட மொழியியல் நிறுவனம், பன்னாட்டுத் திராவிட மொழியியல் பள்ளி, இந்திய மொழியியல் நிறுவனம், சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இந்திய நாட்டுப்புறவியல் நிறுவனம், இந்திய இடப்பெயராய்வு நிறுவனம், புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம், திராவிடப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் தோற்றத்திலும் வளர்ச்சியிலும் அவர் பங்கு சிறப்பாகக் குறிப்பிடற்குரியது. தனிநாயக அடிகளோடு இணைந்து உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தை உருவாக்கி உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெற உறுதுணையாய் இருந்த பெருந்தகை. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர்களில் ஒருவராக இருந்து அதற்கு வழிகாட்டி வந்தார். 29.06.2009 அன்று நிகழ்ந்த அன்னாரின் மறைவு நம்மைத் தாங்கொணாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.


அவரது குடும்பத்தினர்க்குச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவர், ஐம்பெருங்குழு, எண்பேராய உறுப்பினர்கள், அலுவலர்கள் ஆகிய எல்லோருடைய சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


அதேபோல, பேராசிரியர் கமில் சுவெலபில் அவர்களுக்கு நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானத்தில்,

“பேராசிரியர் கமில் சுவெலபில் (1927-2009), செக்கோஸ்லொவாகிய நாட்டில் பிறந்தவர். சார்லஸ் பல்கலைக்கழகத்தில் வடமொழி, தத்துவம், இந்திய இயல், ஆங்கில இலக்கியம் ஆகியவற்றைப் பயின்றவர். வடமொழியிலும் திராவிட மொழியியலிலும் முனைவர் பட்டங்கள் பெற்றுக் கீழைக்கல்வித் துறையில் ஆய்வாளராகப் பணி செய்தவர். தமிழ் மொழிக்கு இலக்கியத் திறனாய்வு, மொழியியல், நாட்டார் வழக்காறு, பண்பாட்டு மானுடவியல், மொழி பெயர்ப்பு ஆகிய துறைகளிலெல்லாம் அருந்தொண்டு ஆற்றிய பேரறிஞர். கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், இதாலியன் போன்ற மேலை மொழிகளையும் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற இந்திய மொழிகளையும் பயின்றிருந்தும் தமிழ் மொழியாலும், இலக்கியத்தாலும் பெரிதும் கவரப்பட்டுத் தமிழ்ப் பணிக்கே தம் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர். ஒப்புநோக்கில் திராவிட ஒலியனியல், திராவிட மொழியியல், தமிழ் இலக்கிய வரலாறு, அகப்பாடல்களில் இலக்கிய மரபுகள், செவ்வியல் தமிழ் யாப்பிலக்கணம் ஆகியவை பற்றிய அவருடைய நூல்கள் தமிழுக்கு நிலைத்த பங்களிப்பு ஆகும்.


17.1.2009 அன்று நிகழ்ந்த சுவெலபிலின் மறைவு தமிழினத்திற்கு ஒரு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினர்க்குச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவர், ஐம்பெருங்குழு, எண்பேராய உறுப்பினர்கள், அலுவலர்கள் ஆகிய எல்லோருடைய சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், பேராசிரியர் ப.மருதநாயகம் “கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை விருது” பற்றிய தகவல் சிற்றேட்டினை வெளியிட்டார். முனைவர் அரிமளம் சு.பத்மநாபன், முனைவர் கூ.மு.புவனேசுவரி ஆகியோர் “கலைஞரின் சங்கத் தமிழ் இசைப் பாடல்களைப்” பாடி, குறுந்தகட்டினை அறிமுகம் செய்தனர். அதனையடுத்து, ஐம்பெருங்குழு, எண்பேராயம் ஆகியவற்றின் துணைத் தலைவர் முனைவர் வா.செ.குழந்தைசாமி, “தமிழ் எழுத்துச் சீரமைப்பு” தொடர்பான குறுந்தகட்டினை அறிமுகம் செய்து, கருத்துரைகள் வழங்கிய பின், பிற உறுப்பினர்களும் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர்.


இக்கூட்டத்தில் தமிழக உயர்கல்வி மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, ஐம்பெருங்குழு, எண்பேராயம் துணைத் தலைவர் முனைவர் வா.செ.குழந்தைசாமி, ஐம்பெருங்குழு உறுப்பினர்கள் முனைவர் ஒளவை நடராசன், கவிப்பேரரசு வைரமுத்து, முனைவர் பு.பா.இராச இராசேசுவரி, எண்பேராயம் உறுப்பினர்கள் முனைவர் மா.நன்னன், கவிக்கோ அப்துல் ரகுமான், கவிஞர் கா.வேழவேந்தன், பேராசிரியர் சாலமன் பாப்பையா, சட்டமன்ற உறுப்பினரும், திறனாய்வாளருமாகிய து.இரவிக்குமார், தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித் துறைச் செயலாளர் க.முத்துசாமி, இ.ஆ.ப., செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் பேராசிரியர் கே.இராமசாமி, முனைவர் எஸ்.மோகன், பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி, முனைவர் பி.மருதநாயகம், பேராசிரியர் சு.பத்மநாபன், பேராசிரியர் கு.புவனேஸ்வரி, பேராசிரியர் கு.சிவமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மூலம்[தொகு]

  • சென்னை ஆன்லைன்