உள்ளடக்கத்துக்குச் செல்

செயற்கை உயிரியை உருவாக்க ஆய்வாளர்கள் தயார்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஆகத்து 25, 2009, ஐக்கிய அமெரிக்கா:


செயற்கையான முறையில் மனிதன் தான் விரும்பிய வடிவில் பரம்பரை அலகுகளை வடிவமைத்து அதன் படி செயற்படக் கூடிய தானே, இனப்பெருக்கம் செய்யக் கூடிய உயிரினங்களை அல்லது உயிர்க் கலங்களை தயாரிக்கும் நிலையை மனிதன் எட்டிவிடும் காலம் வெகு தொலைவில் இல்லை என்கின்றனர் உயிரியல் ஆய்வாளர்கள்.


ஒரு பக்டீரியாவின் பரம்பரை அலகுத் தொகுதியை (genome) மதுவம் (yeast) எனப்படும் ஒரு கல பங்கசுவில் செலுத்தி குறிப்பிட்ட பரம்பரை அலகுத் தொகுதியில் தேவையான மாற்றங்களைச் செய்த பின் அதனை மீண்டும் பிறிதொரு வகை பக்டீரியாவினுள் செலுத்தி அந்த பக்டீரியா பல்கிப் பெருகும் வகையில் தயாரித்து வெற்றி கண்ட பின் இந்தத் தகவலை உயிரியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


ஜே கிரேக் வெண்டர்

"சயன்ஸ்" என்ற அறிவியல் இதழில் இத்தகவல் வெளியாகியுள்ளது. செயற்கை உயிரியலில் புகழ்பெற்ற அறிவியலாளர் ஜே கிரேக் வெண்டர் (J. Craig Venter) என்பவரின் தலைமையில் அமெரிக்காவின் மேரிலாந்தில் வெண்டர் ஆய்வுநிலையத்தைச் சேர்ந்த சஞ்சய் வாஷீ என்பவரின் குழு இவ்வாய்வுகளை மேற்கொண்டிருந்தது.


இந்த வகையில் மனிதன் தனக்கு விரும்பிய பொருளாதார உபயோகமுள்ள பரம்பரை அலகுகளை கொண்ட பக்டீரியா வகை அல்லது உயிர்க்கலங்களை உருவாக்கி உயிர் எரிபொருட்கள் (biofuel) போன்ற அவசியமான உபபொருட்களை கழிவு சேதன பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்க முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.


ஆனால் இந்த ஆராய்ச்சி வழிமுறைகள் தவறானவர்களின் கைகளுக்குப் போயின், மனித இனத்தையே அழிக்கக் கூடிய நுண்ணுயிரிகளை உருவாக்கி மனிதனின் இருப்பையே இந்த உலகில் இருந்து நிரந்தரமாகவும் அழித்து விட முடியும் என்ற பயங்கரமும் இதில் அடங்கி இருப்பதை விஞ்ஞானிகள் உணரத்தான் செய்திருக்கின்றனர். அதனால் எச்சரிக்கையோடு இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளனர்.

மூலம்

[தொகு]