டூக்கான் பறவைக்கு ஏன் இவ்வளவு பெரிய அலகு?

விக்கிசெய்தி இலிருந்து
டூக்கான் பறவை

வியாழன், சூலை 23, 2009 கனடா:


டூக்கான் அல்லது "பேரலகுப் பறவை" என்பது கண்ணைக் கவரும் அழகிய நிறங்களைக் கொண்ட மிகப்பெரிய அலகுடன் இருக்கும் வெப்ப மண்டல அமெரிக்கப் பறவை இனம். இது நடு அமெரிக்கா, மற்றும் தென்னமெரிக்காவின் வடபுறம் வெப்ப மண்டல அமெரிக்கா எனப்படும் பகுதியில் வாழ்கின்றது. பல நூற்றாண்டுகளாக ஏன் இப் பறவைக்கு இவ்வளவு பெரிய அலகு உள்ளது என்று வியந்து வந்தனர். இப்பொழுது இதற்கு ஒரு விடை கிடைத்துள்ளது.


கனடாவில் உள்ள புராக் பல்கலைக்கழகத்தைச் (Brock University) சேர்ந்த முனைவர் கிளென் டாட்டர்சால் (Glenn Tattersall) பிரேசிலில் உள்ள ஆய்வாளர்களுடன் சேர்ந்து அகச்சிவப்புக் கதிர்களைப் படம் பிடிக்கும் கருவி ஒன்றைக்கொண்டு டூக்கான் பறவையைப் படம் பிடித்தார். டூக்கான் பறவைகளிலேயே மிகப்பெரிய அலகு கொண்ட ராம்ப்பாசுட்டோசு டோக்கோ (Ramphastos toco) என்னும் பறவையை அகச்சிவப்பு ஒளிப்படம் எடுத்தார். இக்கருவியின் துணையால் அலகின் வெப்பநிலையையும் உடலின் வெப்பநிலையையும் துல்லியமாகப் படம் எடுக்க முடிந்தது. அவர் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இப்பறவையின் உடலின் வெப்பத்தை அலகு வழியாக வெளியேற்றுகின்றது என்று கண்டுபிடித்தார். இக் கண்டுபிடிப்பை அமெரிக்க அறிவியல் ஆய்விதழ் சயன்சு என்பதில் வெளியிட்டுள்ளார்.


இப்பறவைகளுக்கு வியர்வை வழியாக்க வெப்பத்தை வெளியேற்றும் இயக்கம் இல்லாதாதால், வெப்பம் கூடும் பொழுது அலகுப்பகுதிக்கு குருதி ஓட்டத்தைக் கூட்டுவதால் வெப்பத்தை திறம்பட வெளியேற்றுகின்றது.

மூலம்[தொகு]