உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழகத்தில் நிதி நகரம், வானூர்தி பூங்கா திட்டம்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூலை 14, 2009 சென்னை:

சென்னை அருகே "நிதிநகரம்" ஒன்றும், வானூர்தி தயாரிப்பு தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட வானூர்தி பூங்காத் திட்டம் ஒன்றும் தனியார் பங்கேற்புடன் உருவாக்க முயற்சிகள் எடுக்கப்படும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று தொழில்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து துணை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள் விவரம் வருமாறு:

வாகன உற்பத்தி மற்றும் வடிவமைப்பில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மின்னணு வன்பொருள், மென்பொருள் உற்பத்தியிலும் சிறந்து விளங்குகிறது. வானூர்தி தயாரிப்பு தொடர்புடைய நடவடிக்கைகளில் தமிழ்நாடு முன்னோடியாக வருவதற்கேற்ப தமிழ்நாட்டில் ‘வானூர்தி பூங்கா திட்டம்’ (ஏரோஸ்பேஸ் பார்க் புராஜக்ட்) என்ற ஒரு மாபெரும் திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்த வானூர்தி பூங்கா திட்டத்துக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளான ஓடுதளம், வானூர்தி பொருட்களின் உற்பத்தி மற்றும் சோதனை செய்தல், வானூர்தி பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல் அலகுகள், விமான பயிற்சி கூடங்கள் போன்ற பலவற்றை இத்திட்டம் கொண்டிருக்கும். இத்திட்டம் பொது மற்றும் தனியார் பங்கேற்புடன் செயற்படுத்தப்படும்.

வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பரஸ்பர நிதி (மியூச்சுவல் ஃபண்ட்) நிறுவனங்கள், பங்குச் சந்தை வர்த்தகர்கள் ஆகியோரை ஈர்க்கும் வகையில், சென்னை அருகே நிதிநகரம் ஒன்று தனியார் பங்கேற்புடன் உருவாக்க முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார்

மூலம்

[தொகு]