தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை வெளிவரும்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மே 12, 2011

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாலை வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ளன. வழக்கமான வாக்கு எண்ணிக்கையை விட முடிவுகளை வெளியிட, 10 முதல் 15 சதவீதம் கூடுதல் நேரம் செல்லும் என, தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார்.


தேர்தல் ஏற்பாடுகள் குறித்து பிரவீன்குமார் கூறியதாவது: தமிழகத்தில் 91 மையங்களில் 234 தொகுதிகளுக்கான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது. இதில், 16 ஆயிரத்து 966 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். பாதுகாப்பு பணியில் 45 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதில், 27 கம்பெனிகள் ஏற்கனவே வந்துவிட்டன. மீதம் 18 கம்பெனிகள் இன்று வருகின்றன. காலை 5 மணிக்கே, வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு, தொகுதியின் பார்வையாளர், தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி வந்துவிடுவர். எந்தெந்த மேசையில் வாக்கு எண்ணிக்கைக்கு எந்த ஊழியரை பயன்படுத்துவது என்பது அப்போது முடிவு செய்யப்படும். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகியதும், தொகுதி தேர்தல் அதிகாரியின் மேசையில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அரை மணி நேரத்துக்கு பின், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவுகள் எண்ணப்படும். ஒவ்வொரு சுற்று எண்ணிக்கை முடிந்ததும், அதற்கான படிவம் நிரப்பப்பட்டு, தேர்தல் அதிகாரியின் பார்வைக்கு அனுப்பப்படும். ஒரு சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் அதிகாரி கையெழுத்திட்ட பின், அந்த சுற்று விவரம் அறிவிக்கப்படும். இது தவிர, வாக்கு எண்ணிக்கை வீடியோவில் பதிவு செய்யப்படும். அந்த வீடியோ காட்சிகள், "சிடி'யாக வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் என்று பிரவீன்குமார் தெரிவித்தார்.


தமிழகத்தில், மொத்தமுள்ள, 234 தொகுதிகளில், 4 கோடியே, 70 லட்சத்து, 49 ஆயிரத்து, 529 வாக்காளர்கள் ஓட்டுப் போட தகுதி பெற்று இருந்தனர். புதுச்சேரியில், 8 லட்சத்து, ஐந்தாயிரத்து, 124 வாக்காளர்கள் தகுதி பெற்று இருந்தனர். ஓட்டுப்பதிவில் இதமிழகத்தில், ஒரு கோடியே, 83 லட்சத்து, 81 ஆயிரத்து, 236 ஆண்கள், ஒரு கோடியே, 83 லட்சத்து, 71 ஆயிரத்து, 744 பெண்கள், 134 மற்றவர்கள் என, 3 கோடியே, 67 லட்சத்து, 53 ஆயிரத்து, 114 பேர் ஓட்டுப் போட்டனர். இதன் சதவீதம், 78.12. இதில், தபால் ஓட்டுகள் சேர்க்கப்படவில்லை. மற்ற மாநிலங்கள் பற்றி வெளிவந்த கருத்துக் கணிப்புகளில், குறிப்பிட்ட கூட்டணிக்கு சாதகமாக தெரிவிக்கப்பட்ட போதிலும், தமிழகத்தில், தி.மு.க., அணியா, அ.தி.மு.க., அணியா என்பதை எந்த கருத்துக் கணிப்பும் உறுதிபடத் தெரிவிக்கவில்லை. நாளை பிற்பகலில் தமிழகத்தை அடுத்து ஆளப் போவது யார் என்ற கேள்விக்கு விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


மூலம்[தொகு]