தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் முதலமைச்சர் முன்னிலையில் பதவியேற்றனர்

விக்கிசெய்தி இலிருந்து
யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து ஏனைய செய்திகள்
இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் அமைவிடம்

யாழ்ப்பாண மாவட்டத்தின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

சனி, அக்டோபர் 12, 2013

இலங்கையின் வட மாகாண சபைக்கு தெரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மாகாண சபையின் முதலமைச்சர் சி. வி. விக்னேசுவரன் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் யாழ்ப்ப்பானம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 21 பேர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈபிஆர்எல்எஃப், டெலோ, புளொட் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 9 பேர் கலந்து கொள்ளவில்லை. இந்நிகழ்வுக்கு முன்­ன­தாக நேற்றுக் காலை 8.30 மணி­ய­ளவில் தலைவர்களும், உறுப்பினர்களும் தந்தை செல்­வாவின் நினைவுத் தூபியில் மலரஞ்சலி செலுத்தினர். இதன் பின் வீர­சிங்கம் மண்­ட­பத்­திற்கு அவர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.


பதவியேற்பு நிகழ்வில், சுரேஷ் பிரேமசந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.சர்­வேஸ்­வரன், சி.சிவ­மோகன், து.ரவி­கரன், ஆர்.இந்­தி­ர­ராசா, ம.தியா­க­ராசா ஆகிய ஐந்து உறுப்பினர்களும், புளொட் உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஜி. ரி. லிங்கநாதன் ஆகியோரும், டெலோ உறுப்பினர்கள் எம். கே. சிவாஜிலிங்கம், ஞா. குணசீலன் ஆகியோரே நேற்றைய நிகழ்வில் கலந்துகொள்ளாதவர்கள் ஆவர். ஆனாலும், டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கலந்து கொண்டுள்ளார்.


தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அமைச்சர்களின் தெரிவில் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளின் கோரிக்கைகளைக் கவனிக்கவில்லை என சுரேஷ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

உறுப்பினர்கள் பதவியேற்ற பின்னர் வட மாகாண ஆளுநர் ஜி. ஏ .சந்­தி­ர­சிறி முன்­னி­லையில் அவரது மாளிகையில் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் மற்றும் வேளாண்மை, நீர் விநி­யோ­கம், சுற்றுச் சூழல் அமைச்சர் பொ. ஐங்கரநேசன், கல்வி, கலா­சா­ர­ம் குருகுலராஜா, சுகாதார அமைச்சர் சத்­தியலிங்கம், மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர் டெனீஸ்வரன் ஆகியோர் பதவியேற்றனர்.


சி. வி. கே. சிவஞானம் சபையின் தலைவராகவும், அந்தோனி ஜெகநாதன் துணைத் தலவராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.


நேற்றைய பதவியேற்பு நிகழ்வில் உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், "மக்கள் சார்ந்த முடிவுகளை தான்தோன்றித்தனமாக எடுக்கக்கூடாது," எனத் தெரிவித்தார். "வன்முறைக் காலத்தைக் கடந்து வந்துள்ளோம் என்பதை எவரும் மறக்கக்கூடாது, சுய இலாபத்திற்காக மக்களை மீண்டும் கலவரத்துக்குள் தள்ளக்கூடாது," எனவும் தெரிவித்துள்ளார்.


மூலம்[தொகு]