உள்ளடக்கத்துக்குச் செல்

தாய்லாந்தில் ஆசியான் பாதுகாப்பு மாநாடு தொடங்கியது

விக்கிசெய்தி இலிருந்து
ஆசியான் நாடுகள்

திங்கள், சூலை 20, 2009 தாய்லாந்து:


இந்தோனீசியாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தற்கொலைத் தாக்குதல்களுக்கு மத்தியில் நேற்று தாய்லாந்தின் புக்கெட் தீவில் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்புகளின் (ஆசியான்) பாதுகாப்பு மாநாடு தொடங்கியது.


இருபத்தேழு நாடுகளைக் கொண்ட ஆசியான் வட்டார அமைப்பில் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா போன்ற நாடுகளும் அங்கம் வகிக்கின்றன.


நேற்றுத் தொடங்கிய இந்த மாநாட்டில் பத்து ஆசியான் நாடுகள் ஜகார்த்தா குண்டுவெடிப்புகள், வட கொரிய அணுவாயுதத் திட்டம், தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளுக்கு இடையே பண்டைக்கால கோவில் காரணமாக ஏற்பட்டுள்ள மோதல் போக்கு ஆகிய பிரச்சினைகளை விவாதிக்கும்.


எனினும், கடந்த வெள்ளிக்கிழமை ஜகார்த்தாவின் இரு பெரிய ஹோட்டல்களில் நிகழ்ந்த மோசமான குண்டுவெடிப்புகளால் ஆசியாவில் பயங்கரவாத அமைப்பான ஜமா இஸ்லாமியா பரவி வருவதும் முக்கியப் பிரச்சினையாக விவாதிக்கப்படும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இந்தப் பிரச்சினைகள் குறித்து பத்து ஆசியான் நாடுகள் முதலில் விவாதிக்கும்.


பின்னர் வியாழக்கிழமை தொடங்கி இந்த மாநாட்டில் ஆசியான் வட்டார அமைப்பைச் சேர்ந்த மற்ற நாடுகளான ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா போன்றவை பங்கேற்கும் என ஏஎப்பி செய்தி நிறுவனத் தகவல் தெரிவிக்கிறது.


வெளிநாட்டமைச்ச்சர்கள் மாநாடு


இதற்கிடையில் தென்கிழக்காசிய வெளிநாட்டமைச்சர்கள் தங்கள் நாடுகளுக்கிடையிலான மனித உரிமைகளைப் பேணும் பொருட்டு மனித உரிமைகள் அமைப்பு என்ற பொது அமைப்பை நிறுவ முன்வந்துள்ளனர். தாய்லாந்தில் ஒன்றுகூடிய தென்கிழக்காசிய நாடுகளின் வெளிநாட்டமைச்சர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளபோதும் மியன்மாரில் இடம்பெறும் இராணுவ அடக்கு முறை களால் மக்களின் துயரங்களைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டுள்ளது


தென்கிழக்காசிய நாடுகளின் தலைவர்கள் இந்த வாரத்தின் கடைசிப் பகுதியில் தாய்லாந்தில் கூடவுள்ளனர். இதில் மியன்மார், வடகொரியா விடயங்கள் பற்றிப் பேசப்படவுள்ளன. இதற்கிடையில் வெளிநாட்டமைச்சர்கள் இந்த மனித உரிமைகள் தாபனம் பற்றி இறுதி முடிவுக்கு வரவேண்டியுள்ளனர்.


இந்த அமைப்பு உருவாக்கப்பட்டாலும் மனித உரிமைகளை மீறும் நாடுகளைத் தண்டிக்கும் வல்லமையும் அதிகாரமும் இந்த அமைப்பிடம் இருக்குமா என்பதைக் கூற முடியாதுள்ளது. அத்துடன் இதன் நிர்வாகச் செலவினங்களைப் பொறுப்பேற்பது யார் என்ற சிக்கல்களும் எழுந்துள்ளன. மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் நிலவும் மனித உரிமை மீறல் தொடர்பான சரியான தகவல்களைத் திரட்டுவதிலும் சிக்கல்கள் தோன்றலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


மூலம்

[தொகு]