தாவர விதை வங்கி தனது 10 வீத இலக்கை எட்டியது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, அக்டோபர் 16, 2009, இங்கிலாந்து:

கியூ தாவரவியல் பூங்கா


பூமியில் உள்ள தற்போது வாழ்ந்து வருகின்ற ஆபாயத்தில் உள்ள தாவரங்களின் விதைகள் சேகரிப்பில் ஈடுபட்டு வந்த பன்னாட்டு தாவர விதை வங்கி ஒன்று அண்மையில் இளஞ்சிவப்பு வாழை ஒன்றின் விதைகளைப் பெற்றதன் மூலம் தனது 10% இலக்கை எட்டியது.


மூசா ஐட்டினெரான்ஸ் (Musa itinerans) என அழைக்கப்படும் இவ்வகை வாழை இனம் ஆசிய காட்டு யானைகளின் மிகவும் விருப்பமான உணவாகும்.


பிரித்தானியாவின் கியூ (Kew) தாவரவியல் பூங்காவில் ஏற்கனவே உள்ள 1.7 பில்லியன் விதைகளுடன் இவ்வாழை இனத்தின் விதைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வாழை இனம் இவ்விதை வங்கிக்கு வந்துள்ள 24,200வது தாவர இனமாகும்.


54 நாடுகளில் இயங்கும் பிரித்தானிய றோயல் தாவரவியல் பூங்காக்கள் என்னும் அமைப்பின் 120 கிளைகள் மூலம் இவற்றை சேகரித்துள்ளனர் தாவரவியலாளர்கள்.


இத் திட்டம் மூலம் 2020 ஆம் ஆண்டளவில் புவியில் வாழும் தாவர இனங்களில் 25 விழுக்காட்டினை சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தற்போதைய நிலையில் 60,000 முதல் 100,000 வரையான தாவரங்கள் அழிவின் அபாயத்தி்ல் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முக்கியமாக மனித செயற்பாடுகள் மூலம் இது நடந்தேறி வருகின்றது. கடந்த 2000 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 3.5 பில்லியன் விதைகள் செகரிக்கப்பட்டு அந்தந்த நாடுகளிலும் மற்றும் பிரித்தானியாவின் மேற்கு சசெக்சிலும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவை அனைத்தும் -20C வெப்பநிலையில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.

மூலம்[தொகு]