உள்ளடக்கத்துக்குச் செல்

திருகோணமலை நிவாரணப் பணியாளர்கள் 17 பேரை இலங்கை இராணுவமே படுகொலை செய்தது, அறிக்கை வெளியீடு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், திசம்பர் 4, 2013

பிரான்சின் வறுமைக்கு எதிரான அமைப்பின் 17 நிவாரணப் பணியாளர்களை இலங்கை இராணுவத்தினரே படுகொலை செய்தது என்றும், கொலையாளிகளை இலங்கை அரசு பாதுகாத்து வருவது ஒரு அப்பட்டமான போர்க்குற்றம் எனவும் அவ்வமைப்பு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக் காட்டியுள்ளது.


2006 ஆகத்து 4 ஆம் நாள் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இப்படுகொலைகளை நிகழ்த்தியது இலங்கை இராணுவம், கடற்படை, மற்றும் காவல்துறையினர் என்பதற்குத் தம்மிடம் ஆதாரம் உள்ளதாக அவ்வமைப்பு அறிவித்துள்ளது.


"நிவாரணப் பணியாளர்களுக்கு எதிராக இடம்பெற்ற மிகப் பெரும் தாக்குதல் இதுவாகும். 17 பேரும் வரிசையாக முழங்காலில் நிற்கவைக்கப்பட்டுப் தலையில் சுடப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்,” என வறுமைக்கு எதிரான அமைப்பு கூறியுள்ளது.


"17 மனித நேய உதவிப் பணியாளர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டதின் உண்மை வெளிப்பாடுகள்" என்ற தலைப்பில் அறிக்கை ஒன்று நேற்று வெளியிடப்பட்டது. சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் தமிழர்கள் 16 பேர், ஒருவர் முஸ்லிம்.


இலங்கை அரசின் அதிகாரபூர்வ விசாரணை முடிவுக்காக நாம் காத்திருந்தோம். ஆனால், போர்க்குற்றம் புரிந்தவர்களை இலங்கை அரசு நீதியின் முன் நிறுத்தும் என்ற நம்பிக்கையை நாங்கள் இழந்து விட்டோம். சர்வதேச அளவில் நீதியான விசாரணை நடத்தியே, இலங்கையில் மனித உரிமை மீறல் குற்றவாளிகளை குற்றவாளிக்கூண்டில் நிறுத்த முடியும் என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இந்தத் தகவலை இது வரை இந்த நிறுவனம் வெளியிடாமல் வைத்திருந்ததன் உள்நோக்கங்களை இலங்கை ராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார். தமக்குத் தெரிந்த உண்மையை முன்னரே வெளியிட்டிருந்தால் நமது விசாரணைக்கு அது உதவியிருக்கும் என அவர் தெரிவித்தார்.


2004 சுனாமி அழிவுகளை அடுத்து ஏசிஎஃப் அமைப்பின் பணியாளர்கள் மூதூரில் தமது நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வந்தனர். இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் மூண்டதை அடுத்து பல பன்னாட்டு உதவி நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேறிய நிலையில் ஏசிஎஃப் போன்ற ஒரு சில நிறுவனங்களே அங்கு தங்கியிருந்து சேவையாற்றின.


குறிப்பிட்ட நாளில் அரசுப் படையினர் அவ்விடத்துக்கு வந்த போது நிவாரணப் பணியாளர்கள் தேநீர் இடைவேளை எடுத்திருந்தனர் எனத் தம்மிடம் ஆதாரம் உள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் முழங்காலில் நிற்க வைக்கப்பட்டனர் என்றும் கடற்படையின் சிறப்புக் கமாண்டோக்களின் முன்னிலையில் 15 பேரை அவர்களின் தலைகளில் காவல்துறையினர் சுட்டனர் என்றும் மேலும் இருவர் தப்பியோட எத்தனிக்கையில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இப்படுகொலைகளின் பின்னர் ஏசிஎஃப் அதிகாரிகள் அங்கு செல்ல முயன்ற போது அவர்கள் இராணுவத்தினரால் நான்கு முறை தடுக்கப்பட்டனர். பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள், மற்றும் இலங்கை போர்க் கண்காணிப்பு அலுவலர்களும் அவ்விடத்துக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஆகஸ்ட் 7 ஆம் நாளே இறந்தவர்களின் உடல்களை மீட்க முடிந்தது. இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மூலம்[தொகு]