தென் ஆப்பிரிக்காவில் மகாத்மா காந்தி தங்கியிருந்த வீடு விலை போகிறது

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search
தென்னாப்பிரிக்காவில் காந்தி (1906)

திங்கள், சூலை 27, 2009 தென்னாப்பிரிக்கா:


இந்தியாவின் ஆன்மீக மற்றும் அரசியல் தலைவரான மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவின் ஜோகான்னஸ்பர்க் நகரில் 1900களின் ஆரம்பத்தில் வாழ்ந்த போது தங்கியிருந்த வீடு விற்பனைக்காக வந்துள்ளது.


ஜோகான்னஸ்பர்கின் வடக்கே இருக்கும் புறநகரான ஆர்ச்சர்ட்ஸ் பகுதியில் இருக்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது இவ்வீடு. இவ்வீட்டை சட்டபூர்வமாக நிருவகிப்பதற்கு எந்த நிறுவனமும் முன்வராத காரணத்தினால் இதனைத் தாம் விற்கவிருப்பதாக இதன் உரிமையாளரான அமெரிக்க ஓவியர் நான்சி பெல் கூறினார். இவர் 25 ஆண்டுகாலமாக இவ்வீட்டில் வாழ்ந்து வருகிறார். இந்த வீட்டை விற்பனை செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியும், இதை வாங்க எவரும் ஆர்வம் காட்டவில்லை. தென்னாபிரிக்காவில் வாழும் இந்தியர்களில் சிலர் மட்டுமே ஓரளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.


1893 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு வந்த காந்தி 1907 ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் மகாத்மா காந்தி அந்த வீட்டில் வாழ்ந்தார். அந்த நேரத்தில்தான் அவர் தனது சிந்தாந்தங்களான உண்மை மற்றும் வன்முறையற்ற அறவழிப் போராட்டம் ஆகியவற்றுக்கு வடிவம் கொடுத்தார்.


ஜோகன்னஸ்பர்க்கின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த வீடு, மரங்கள் சூழ கட்டப்பட்டுள்ளது. மகாத்மா காந்திக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரியவராயிருந்த ஹெர்மான் காலின்பாக் இந்த வீட்டை வடிவமைத்துள்ளார்.


தென் ஆப்பிரிக்காவில் அவர் மொத்தம் 21 ஆண்டுகள் தங்கியிருந்தார். அப்போது அவர் வழக்கறிஞராகவும் செயற்பாட்டாளராகவும் பணியாற்றினார். 1914 ஆம் ஆண்டில் அவர் நாடு திரும்பினார்.


1800 மற்றும் 1900ஆம் ஆண்டுகளில் அவர் நடத்திய போராட்டத்தின் விளைவு இன்றும் நினைவுகூரப்படுகிறது. பல நிறுவனங்களும், தெருக்களும் காந்தியின் பெயரை தாங்கி நிற்கின்றன.


மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்கள் சமீபத்தில் லண்டனில் ஏலத்துக்கு விடப்பட்டன. அவற்றை இநதியாவைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா பெருந்தொகை பணம் கொடுத்து வாங்கி அரசிடம் ஒப்படைத்தார்.

மூலம்[தொகு]