உள்ளடக்கத்துக்குச் செல்

தெற்கு ஒசேத்தியா அரசுத்தலைவர் தேர்தலில் உருசிய சார்பு லியோனித் திபிலொவ் வெற்றி

விக்கிசெய்தி இலிருந்து
தெற்கு ஒசேத்தியாவில் இருந்து ஏனைய செய்திகள்
தெற்கு ஒசேத்தியாவின் அமைவிடம்

தெற்கு ஒசேத்தியாவின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

திங்கள், ஏப்பிரல் 9, 2012

ஜோர்ஜியாவில் இருந்து பிரிந்து சென்ற தெற்கு ஒசேத்தியாவில் அரசுத்தலைவரைத் தேர்ந்தெடுக்க நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் உருசிய சார்பாளரும், முன்னாள் தேசிய பாதுகாப்பு முகமையான கேஜிபி தலைவருமான லியோனித் திபிலோவ் வெற்றி பெற்றுள்ளார்.


திபிலோவ் 54.12% வாக்குகளைப் பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட டேவிட் சனக்கோயெவ் 42.65% வாக்குகளைப் பெற்றார். மொத்தம் 72,000 வாக்காளர்களைக் கொண்டுள்ள சிறிய தெற்கு ஒசேத்தியாவில் 63 வீதமானோர் வாக்களித்திருந்தனர்.


வாக்குப்பதிவுகள் அமைதியாகவும் மோசடி எதுவுமில்லாமலும் நடைபெற்றதாக உருசியாவில் இருந்து சென்ற தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்தனர். ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் இந்த வாக்குப்பதிவை நிராகரித்திருக்கின்றன. தெற்கு ஒசெத்தியா இன்னும் ஜோர்ஜியாவின் ஒரு பகுதி என்றே இரண்டு நாடுகளும் கருதுகின்றன.


தெற்கு ஒசேத்தியாவை உருசியா உட்பட சில நாடுகளே அங்கீகரித்துள்ளன. கடந்த ஆண்டு நவம்பரில் இடம்பெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சித்தலைவர் அல்லா ஜியோயேவா வெற்றி பெற்றார். ஆனாலும், வாக்கெடுப்பில் ஜியோயேவா சார்பில் பெரும் மோசடி நிகழ்ந்ததாகக் கூறி உச்சநீதிமன்றம் அத்தேர்தலை நிராகரித்திருந்தது மட்டுமன்றி ஜியோயேவா இரண்டாம் கட்டத் தேர்தலில் கலந்துகொள்ளவும் தடை விதிக்கப்பட்டது.


இதற்கிடையில், தெற்கு ஒசேத்தியாவில் இடம்பெற்ற தேர்தலை ஜோர்ஜியா கடுமையாகச் சாடியிருக்கிறது. தெற்கு ஒசேத்தியா ஜோர்ஜியாவுக்குச் சொந்தமானது, என ஜோர்ஜியா கூறியிருக்கிறது. 2008 ஆம் ஆண்டில் தெற்கு ஒசேத்தியாவுக்காக உருசியாவும் ஜோர்ஜியாவும் 5-நாள் போரில் ஈடுபட்டன. தெற்கு ஒசேத்தியாவின் தலைநகர் த்ஸ்கின்வாலி மீது ஜோர்ஜியா தாக்குதல் நடத்தியது. இதனை அடுத்து தெற்கு ஒசேத்தியாவையும், ஜோர்ஜியாவில் இருந்து பிரிவினையை அறிவித்த வேறொரு மாநிலமான அப்காசியாவையும் உருசியா தனிநாடாக அங்கீகரித்தது.


மூலம்[தொகு]