தொங்கா நாட்டில் பயணிகள் படகு மூழ்கியதில் 50 பேருக்கு மேல் இறப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், ஆகத்து 6, 2009, தொங்கா:


பசிபிக் நாடான தொங்காவின் தீவுகளுக்கிடையில் பயணிகள் படகு ஒன்று மூழ்கியதில் பலர் கடலில் மூழ்கி இறந்துள்ளதாக ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரட் இன்று தெரிவித்தார்.


சிட்னியில் தெற்கு பசிபிக் தலைவர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். பிரின்சஸ் அசிக்கா என்ற கப்பல் தொங்காவின் தலைநகர் நுக்கு'அலோஃபா மற்றும் அதன் அயல் தீவுகளுக்கிடையில் பயணிக்கையிலேயே கடலில் கவிழ்ந்தது.


பெண்கள், குழந்தைகள் உட்பட 50 பேருக்கு மேல் காணாமல் போயுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஒருவரின் உடலே இதுவரை மீட்கப்பட்டுள்ளது.


இப்படகில் 96 பேர் பயணித்ததாகவும், 23 பயணிகள் உட்பட 50 பேர் வரை காப்பாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்களே காப்பாற்றப்பட்டவர்களில் அதிகம் என்றும் பெண்கள் குழந்தைகள் பலரைக் காப்பாற்றாமல் போய்விட்டது எனவும் தப்பிவந்தவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


நியூசிலாந்தில் இருந்து கடல் கண்காணிப்பு விமானங்கள் மற்றும் படகுகள் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்துள்ளன. கடல் வேப்பநிலை 25செ ஆக இருந்தமையால் மூழ்கியவர்கள் பலர் அதிக நேரம் கடலீல் உயிருடன் இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


புதன்கிழமை உள்ளூர் நேரப்படி நள்ளிரவு தலைநகருக்கு வட-கிழக்கே 55 மைல் தூரத்தில் பிரின்சஸ் அஷிக்கா என்ற இக்கப்பல் மூழ்கியுள்ளது.

மூலம்[தொகு]