உள்ளடக்கத்துக்குச் செல்

நீரிழிவு நோயை உண்டாக்கும் உடல் எடை தெற்காசியர்களுக்கு 'மாறுபடுகிறது'

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சூலை 10, 2009 லண்டன்:

ஒருவரது உடல் எடை எந்த அளவைத் தாண்டினால் அவருக்கு நீரிழிவு, மற்றும் இருதய நோய் போன்றவை வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பது தொடர்பில் பாரம்பரியமாக மருத்துவர்கள் கருதிவரும் அளவுகள் இந்திய துணைக்கண்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு பொருந்தாது என்று பன்னாட்டு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏனையோரைப் பொறுத்தவரை ஆபத்தில்லாத உடல் எடையாக கருதப்படும் அளவுகளில்கூட தெற்காசியப் பூர்வீகம் கொண்டோருக்கு இருதயக் கோளாறுகளும் நீரிழிவு நோயும் வர வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஒருவருடைய உயரம் மற்றும் பருமனை கணக்கில் கொண்டு அவருடைய உடல் திண்மக் குறியீடு (Body mass index, BMI) என்ற ஒரு எண்ணை மருத்துவர்கள் கணக்கிடுவார்கள்.

அந்த எண் இருபத்து ஐந்தைத் தாண்டினால் அது அவருடைய உயரத்துக்கு அதிக எடை என்றும், அதே குறியீடு முப்பதைத் தாண்டுகிறது என்றால், அது நோயாபத்துகளை உண்டாக்கும் அளவுக்கதிகமான உடற்பருமன் என்றும் மருத்துவர்கள் சாதாரணமாக கருதிவருகின்றனர்.

ஆனால் தெற்காசியப் பூர்வீகம் கொண்ட மக்களைப் பொறுத்தவரையில் உடல் திண்மக் குறியீடு 23ஐத் தாண்டினாலே அது அதிக எடை என்றும் 25ஐத் தாண்டினால் அது நோயாபத்துகளை உண்டாக்கும் அளவுக்கதிகமான உடற்பருமன் என்றும் கொள்ள வேண்டும் என புதிய வரையறைகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன.

இதன்படி மேலும் 70 மில்லியன் மக்கள் அளவுக்கதிகமான உடற்பருமனைக் கொண்டிருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்

[தொகு]