நெப்போலியனின் 1812 படையெடுப்பில் தோல்வியடைந்த படைவீரர்களின் உடல்கள் லித்துவேனியாவில் அடக்கம்
செவ்வாய், நவம்பர் 30, 2010
- 29 அக்டோபர் 2012: லித்துவேனியா தேர்தல்: எதிர்க்கட்சிக் கூட்டணி வெற்றி
- 30 நவம்பர் 2010: நெப்போலியனின் 1812 படையெடுப்பில் தோல்வியடைந்த படைவீரர்களின் உடல்கள் லித்துவேனியாவில் அடக்கம்
பிரெஞ்சுப் பேரரசன் நெப்போலியன் பொனபார்ட் 1812 ஆம் ஆண்டில் உருசியா மீது தொடர்ந்த தோல்வியடைந்த போரில் பங்குபற்றிய 18 பிரெஞ்சுப் படைவீரர்களின் உடல் எச்சங்கள் லித்துவேனியாவில் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டன.
இவர்களின் உடல் எச்சங்கள் 2009 ஆம் ஆண்டில் லித்துவேனியத் தலைநகர் வில்னியூசிற்கு வெளியே கட்டிடத் தொழிலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
நெப்போலியனின் உருசியா மீதான போரில் 500,000 பேர் அடங்கிய அணி பங்கு பற்றியது. ஆனால் இப்போரில் அவர்கள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அவர்களில் பெரும்பாலானோர் பட்டினி, கடும்குளிர், தொற்றுநோய் போன்ற காரணிகளால் அங்கேயே இறந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் வில்னியூசிற்கு அருகே இறந்தனர். இவர்களின் உடல்கள் அவ்வவ்விடங்களிலேயே புதைக்கப்பட்டன.
2003 ஆம் ஆண்டில் 3,500 பிரெஞ்சு இராணுவத்தினரின் எச்சங்கள் லித்துவேனியாவில் அடக்கம் செய்யப்பட்டன. இப்போது வேறொரு பகுதியில் 18 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
உருசியப் படைகள் வில்நியூசைக் கைப்பற்றுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் தனது படையினரை விட்டு விட்டு நெப்போலியன் அங்கிருந்து தப்பியோடினான்.
கடும் குளிரில் நிலம் உறைந்து போயிருந்ததால் இறந்த பிரெஞ்சுப் படையினரின் உடல்கள் ஆங்காங்கேயிருந்த அகழிகளில் உருசியப் படையினரால் எறியப்பட்டன.
வரலாற்றில் மிகவும் புகழ் பெற்றவனாக விளங்கிய நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சு இராணுவத்தில் வளர்ந்து பின்னர் 1804 ஆம் ஆண்டில் பிரெஞ்சுத் தலைவனாகத் தன்னை அறிவித்தான்.
தனது வல்லரசை விரிவாக்கும் அவனது திட்டங்கள் கடைசியில் தோல்வியடைந்தாலும், தனது இராணுவத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதில் வெற்றி கண்டான்.
மூலம்
[தொகு]- Napoleon's defeated soldiers buried in Lithuania, பிபிசி, நவம்பர் 29, 2010