உள்ளடக்கத்துக்குச் செல்

நேட்டோ தாக்குதலில் பாக்கித்தான் இராணுவத்தினர் 24 பேருக்கு மேல் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, நவம்பர் 27, 2011

பாக்கித்தானில் சோதனைச் சாவடியொன்றில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீது நேட்டோ உலங்குவானுர்தி நடத்திய தாக்குதலில் 24 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 2 உயரதிகாரிகளும் அடங்குவர். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்று பாக்கித்தான் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.


பாக்கித்தான் மற்றும் ஆப்கான் எல்லைப் பகுதியிலேயே நேறுச் சனிக்கிழமை அன்று இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து ஆப்கானிஸ்தானிலுள்ள நேட்டோ படைகளுக்கான விநியோகப் பொருட்கள் போகும் பாதைகள் அனைத்தையும் மூடியுள்ளதாகப் பாக்கித்தான் ராணுவம் கூறியுள்ளதோடு குறித்த சம்பவத்திற்கு பாக்கித்தான் அரசு கடும் கண்டனத்தினையும் தெரிவித்துள்ளது.


'இத்தாக்குதலுக்கான தக்க பதில் நடவடிக்கை இருக்கிறது, அது என்ன என்பதை பாகிஸ்தான் ராணுவம் தீர்மானித்துக் கொள்ளும்’ என்று பாக்கித்தான் ராணுவத்தின் சார்பில் பேசிய ஜெனரல் அதர் அப்பாஸ் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலைக் கடும் கோபத்தைக் கிளப்பும் செயல் என்று வர்ணித்த பாக்கித்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்தை அவசரமாகக் கூட்டினார்.


என்ன நடந்தது என்று உண்மையை அறிய விசாரணைகளை நடத்துவதாக நேட்டோ தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களின் உறவினர், மற்றும் குடும்பங்களுக்கு - ஆப்கானிஸ்தானிலுள்ள நேட்டோ படைகளின் தலைமைத் தளபதி ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளார்.


மூலம்

[தொகு]