உள்ளடக்கத்துக்குச் செல்

பட்டினி இருந்து இறக்க நோயாளிக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் அனுமதி

விக்கிசெய்தி இலிருந்து
பேர்த் நகரம்

வியாழன், ஆகத்து 20, 2009, பேர்த், ஆஸ்திரேலியா:


பட்டினி இருந்து இறப்பதற்கு அனுமதிக்கக் கோரி நோயாளியொருவர் கொடுத்த மனுவை ஏற்றுக்கொண்ட ஆஸ்திரேலிய நீதிமன்றம் முதன் முறையாக பட்டினி கிடந்து சாவதற்கு அனுமதியளித்துள்ளது.


மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகர் பேர்த் நகரைச் சேர்ந்த கிரிஸ்டியன் ரோசிட்டர் (வயது 49) கடந்த சில மாதமாகக் கடுமையான பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். கழுத்துப் பகுதி அசைவற்ற நிலையில் இருப்பதால் சாப்பிடுவது மற்றும் தண்ணீர் அருந்துவதற்கும் கூட மிகவும் சிரமப்பட்டு வருகிறார். நீர் ஆகாரம் மட்டுமே குழாய் மூலம் கொடுக்கப்பட்டு வருகிறது.


சமீபத்தில் இவர் திடீரென தனக்கு எந்த உணவும் தண்ணீரும் தர வேண்டாம் என்று மருத்துவமனை டாக்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் இதை ஏற்கவில்லை. நோயாளியை பட்டினி கிடந்து சாக அனுமதித்தால் அது பெரும் குற்றம். அதற்காக ஆயுள் தண்டனை அளிக்க சட்டம் உள்ளது என்பதால் டாக்டர்கள் நோயாளியின் கோரிக்கையை நிராகரித்தனர்.


இந்த நிலையில், தன்னை பட்டினி கிடந்து சாக அனுமதிக்கும்படி நீதிமன்றில் ரோசிட்டர் மனு செய்தார். அவர் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இது தொடர்பாக விசாரித்தது.


இதனைத் தொடர்ந்து தீர்ப்பளித்த நீதிபதி வெய்ன் மார்ட்டின்;


"நோயாளி ரோசிட்டர் வேண்டுகோளை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. அவர் பட்டினி கிடந்து சாவதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது என்பதை உணர்ந்து இதற்கு அனுமதி அளிக்கிறது என்று தெரிவித்தார்.


நீதிபதியின் இந்தத் தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவில் இதுவரை இப்படி ஒரு தீர்ப்புக் கிடைத்ததில்லை. அதனால், இந்தத் தீர்ப்பு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது."


நீதிபதி மேலும் கூறுகையில்;


"ஒருவரின் உரிமையில் தலையிட மற்றவர்களுக்கு உரிமையில்லை. அப்படித்தான் ரோசிட்டரும் தனது உரிமையை அறிந்துள்ளார். அவர் உரிமையில் டாக்டர்கள் தலையிட உரிமையில்லை. தனக்கு எப்படிப்பட்ட சிகிச்சையளிக்க வேண்டுமென்பதை அவர் சொல்லலாம். அதை டாக்டர்கள் ஏற்க வேண்டும். இந்த நிலையில், அவர் பட்டினி கிடந்து சாக அனுமதி அளிக்கப்படுகிறது" என்றும் விளக்கம் தெரிவித்தார்.


ரோசிட்டர் வழக்கால் அவரைப் போன்ற மனநிலையுள்ள மற்ற நோயாளிகளுக்கு பெரும் பலன் கிடைத்துள்ளது. அவரைப் போல சாக விரும்புவோருக்கு இந்தத் தீர்ப்பு ஒரு திருப்பு முனையாகும் என்று ரோசிட்டரின் வக்கீல் ஜான் ஹாமண்ட் கூறியுள்ளார்.

மூலம்[தொகு]