பப்புவாவில் பொதுமக்கள் சித்திரவதை, இந்தோனேசியா ஒப்புக்கொண்டது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, அக்டோபர் 22, 2010

இவ்வார ஆரம்பத்தில் இணையத்தளம் ஒன்றில் பொதுமக்களை சில நபர்கள் தாக்குவது குறித்த காணொளி வெளியிடப்பட்டதை அடுத்து, குறிப்பிட்ட நபர்கள் தமது இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்று இந்தோனேசியா ஒப்புக் கொண்டுள்ளது.


இந்தோனேசியாவில் பப்புவா மாகாணம்

தமது படையினரின் செய்கைகள் வரம்புக்கு மீறியவை என்றும், தொழில் நெறிக்கு அப்பாற்பட்டது என இந்தோனெசியாவின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். இதில் சம்பந்தப்பட்ட இராணுவத்தினர் தண்டிக்கப்படுவர் என்றும் இது குறித்த விசாரணைகள் தொடரும் எனவும் அவர் கூறினார்.


இணையத்தளங்களில் வெளியிடப்பட்ட காணொளி பன்னாடுகளிலும் மனித உரிமைக் குழுக்களால் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது. இந்தோனேசிய இராணுவத்துடன் ஐக்கிய அமெரிக்கா கூடுதல் உறவைப் பேண அண்மையில் எடுத்த முடிவுகள் சந்தேகத்தைப் பரவலாகக் கிளப்பியுள்ளன.


ஆங்காங்கைச் சேர்ந்த ஆசிய மனித உரிமை ஆணைக்குழு இந்தக் காணொளியை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இராணுவ உடையில் உள்ள சில நபர்கள் இந்தோனேசியாவின் பப்ப்வா மாகாணத்தின் சில பழங்குடியினரை அடித்துத் துன்புறுத்துவது போன்ற காட்சிகள் இதில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் பொதுமக்கள் ஆயுதக் குழுக்களுடனும், பிரிவினைவாதிகளுடனும் தொடர்புள்ளவர்கள் என அந்நபர்கள் குற்றம் சாட்டித் துன்புறுத்துவது போல காட்டப்பட்டிருந்தது. அத்துடன், பப்புவா நபர் ஒருவரை நிலத்தில் கட்டப்பட்டு இராணுவத்தினரால் துன்புறுத்தப்படுவது காட்டப்பட்டுள்ளது.


பப்புவாவில் தாம் பிடித்த நபர்கள் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்பதைத் தாம் நம்புவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜோக்கோ சுயாண்டோ தெரிவித்தார். அவர்களிடம் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.


ஆனால் கைது செய்யப்பட்டோர் சாதாரண விவசாயிகள் என மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.


மூலம்[தொகு]