உள்ளடக்கத்துக்குச் செல்

பப்புவா நியூகினியில் சுற்றுலா விமானம் வீழ்ந்ததில் 13 பேர் இறப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், ஆகத்து 12, 2009


பப்புவா நியூ கினியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பிஎன்ஜி ஏர்லைன்சு விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இவ்விமானத்தில் இரண்டு விமானிகளுடன் 9 ஆஸ்திரேலியர்களும் ஒரு ஜப்பானியரும் ஒரு உள்ளூர்ப் பயணியும் பயணித்திருந்தனர்.


பப்புவா நியூகினியா எயர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 20 இருக்கைகள் கொண்ட பயணிகள் விமானம் ஒன்று நேற்றுமுன்தினம் காலை தலைநகர் போர்ட் மோர்ஸ்பி இலிருந்து அந்நாட்டிலுள்ள கோக்கோடா ட்ராக் என்ற சுற்றுலா தலத்திற்குச் சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் காலை 10.53 மணியளவில் திடீரென காணாமல் போனது. விமானக் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பையும் அது இழந்தது.


அவ்விமானம் தரையிறங்கவில்லை என அறிந்த உடனும் மீட்புப் பணியாளர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். இரு ஹெலிகொப்டர்கள் மற்றும் விமானம் எனபன தேடுதலில் ஈடுபட்டிருந்தாலும், மேகக் கூட்டம் மற்றும் குறைந்த தெளிவற்ற நிலை காரணமாக இப்பணி தாமதமானது. விமானம் வீழ்ந்த இடம் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் அவ்விடத்துக்குச் செல்லுவதற்கு சிரமமாக இருந்ததால் இரண்டு படைவீரர்கள் உயிர்தப்பியவர்களைக் கண்டறியும் நோக்கில் அங்கு தரையிறக்கப்பட்டார்கள்.


மூலம்

[தொகு]