பர்மா ஆறாயிரத்துக்கும் அதிகமான கைதிகளை விடுவிக்கிறது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், அக்டோபர் 12, 2011

மியன்மர் அரசுத்தலைவர் தெயின் செய்ன் சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு அறிவித்ததை அடுத்து அதிகாரிகள் அரசியல் கைதிகள் உட்பட சிறைக்கைதிகள் பலரை விடுவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.


இன்று விடுவிக்கப்பட்டவர்களில் நடிகரும் அதிருப்தியாளருமான சர்கனார் என்பவரும் அடங்குவார். 2008 ஆம் ஆண்டு நர்கீஸ் புயல் தாக்கத்தை பர்மா கையாண்ட விதம் குறித்து இவர் கேள்வி பொதுவில் கேள்வி எழுப்பியதை அடுத்துக் கைது செய்யப்பட்டிருந்தார். பர்மாவில் மட்டும் நர்கீசு புயலில் சிக்கி 140,000 பேர் வரை இறந்தனர்.


ஆறாயிரத்துக்கும் அதிகமானோர் விடுவிக்கப்படுவர் என அரசு அறிவித்திருந்தாலும், இவர்களில் எத்தனை பேர் அரசியல் கைதிகள் என்பது திட்டவட்டமாகத் தெரியவில்லை. ஆனாலும் 150 இற்கும் அதிகமான அரசியல் கைதிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மே மாதத்தில் வழங்கப்பட்ட பொது மன்னிப்பை அடுத்து சில அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டிருந்தனர்.


மியான்மரில் 2000 க்கும் மேற்பட்டோர் அரசியல் கைதிகளாக இருப்பதாகவும் மேலும் பல ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள், பெளத்த பிக்குகள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.


மியன்மரின் மிகவும் மோசமான சிறைச்சாலை எனக் கருதப்படும் யங்கூன் சிறைச்சாலை உட்பட 42 சிறைச்சாலைகளிலும், 109 தடுப்பு முகாம்களிலும் 60 ஆயிரம் கைதிகள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.


மூலம்[தொகு]