உள்ளடக்கத்துக்குச் செல்

பழனியில் சூரியகிரகணத்தைக் குறிக்கும் அரிய கல்வெட்டு கிடைத்துள்ளது

விக்கிசெய்தி இலிருந்து
பழனி மலை

திங்கள், சூலை 20, 2009 தமிழ்நாடு:


பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் சூரிய கிரகணம் குறித்த, பழங்காலத்தைய அரிய கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.


பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயில் அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலாகும். இக்கோயிலில்தான் தைப்பூசம், வைகாசி விசாகம் உள்ளிட்ட பெருவிழாக்கள் நடைபெறுகின்றன. கி.பி. 14-ம் நூற்றாண்டுக்கு முன், பாண்டிய மன்னர்களால் சிவன் கோயிலாகக் கட்டப்பட்ட இக்கோயில், மாலிக்காபூரின் தாக்குதலுக்குப் பின் 17-ம் நூற்றாண்டில், திருமலைநாயக்கர் காலத்தில் அம்மன் கோயிலாக உருமாற்றம் பெற்றது.


இக்கோயிலில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, கட்டடக்கலை நிபுணர் மணிவண்ணன் மற்றும் மகளிர் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, கோயிலின் யாகசாலை அறை சுவற்றில் பழங்காலக் கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டது. முன், பின் எழுத்துக்கள் அழிந்த நிலையில் 4 வரிகள் மட்டுமே இதில் உள்ளன.


பலவைய பேர்களுக்கு...... சூரிய கிராணப் புண்ணிய காலத்தில்..... நீராகத் தாரை வாத்து---------கல்வெட்டிக் கொள்ள-------- என உள்ள இந்த எழுத்துகள் 17-ம் நூற்றாண்டின்போது சூரியகிரகணத்தன்று, பெரியநாயகியம்மன் கோயிலுக்கு நிவந்தத்துக்கு நிலம் தானமாக நீர்வார்த்துக் கொடுக்கப்பட்ட செய்தி பொறிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், கல்வெட்டு மூலம் பல அரிய தகவல்கள் தெரிய வருகின்றன.


பண்டைய காலத்தில் நவீன கருவிகள் இல்லாமலேயே, சூரிய கிரகணத்தை தமிழர்கள் அறிந்துள்ளதும், அது நடக்கும் காலத்தில், இறைவனுக்கு நிவந்தங்கள் அளித்ததும், பழங்காலத்தில் சூரியகிரகண நேரத்தில் கோயில்களுக்குத் தானம் வழங்கும் பழக்கம் இருந்ததும் தெரியவந்துள்ளது. பழனி மலைக்கோயில் கருவறை வடக்குப் பகுதியில், மல்லிகார்ச்சுனராயர் பொறித்த சூரியகிரகணம் குறித்த கல்வெட்டு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


அந்தக் கல்வெட்டிலும், இதேபோல, சூரியகிரகண காலத்தை புண்ணியகாலம் என்றே தானத்துக்கு சிறந்த நேரமாகக் குறித்துள்ளனர். தற்போது சூரியகிரகண நேரத்தை பேரழிவு ஏற்படும் காலமாக எண்ணி, அச்சப்பட்டு வருகிறோம்.


22-ம் தேதி காலை நடைபெறவுள்ள சூரியகிரகணம் 360 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும், மிக நீண்ட அரிய சூரியகிரகணமாகும். 360 ஆண்டுகளுக்கு முன் என அறிவியலாளர்கள் கூறும் காலமும், பெரியநாயகியம்மன் கோயிலில் உள்ள 17-ம் நூற்றாண்டு காலக் கல்வெட்டும் சமகாலத்தவையாக உள்ளன.


ஆகவே அந்தக் கல்வெட்டு அரிய சூரிய கிரகணத்தை முன்னிட்டு பொறிக்கப்பட்டது உறுதியாகிறது என, ஆய்வாளர்கள் ஆச்சரியம் தெரிவிக்கின்றனர்.

மூலம்

[தொகு]