பாகிஸ்தானில் 12 பிணைக்கைதிகள் கொல்லப்பட்டனர்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், ஆகத்து 19, 2009, பாகிஸ்தான்:


பாகிஸ்தானில் குவெட்டா பிரிவினைவாதப் போராளிகளால் சென்ற மாதம் பிணை பிடிக்கப்பட்ட ஒன்பது காவல்துறையினரின் சடலங்கள், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் வட்டாரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி கலீம் உல்லா தெரிவித்தார்.


காவல்துறை அதிகாரிகள் நான்கு நாட்களுக்கு முன்பு கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. ஜூலை மாதக் கடைசியில், 24 போலிஸ் அதிகாரிகளையும் தொழிலாளர்களையும் போராளிகள் பிணை பிடித்தனர். மூன்று போலிஸ் அதிகாரிகள் அவர்களிடமிருந்து தப்பித்தனர்.


ஏற்கனவே 12 பிணையாளிகளின் சடலங்கள் கிடைத்துவிட்டன. "இப்போது ஒன்பது போலிஸ் அதிகாரிகளின் சடலங்கள் கிடைத்துள்ளன. அவர்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருந்தனர்" என்றார் உல்லா.


பிரிவினைவாதப் போராளிகளின் பேச்சாளரான சர்பஸ் பலோச், கடத்தலுக்கும் கொலைகளுக்கும் தாங்களே பொறுப்பு என்று இம்மாதத் தொடக்கத்தில் செய்தியாளர்களிடம் தொலைபேசி வழி கூறினார். பாதுகாப்புப் படையினர் அந்நகரிலிருந்து வெளியேற வேண்டும் என்பது போராளிகளின் கோரிக்கை.


பலுசிஸ்தானின் தலைநகர் குவெட்டாவில் அடுத்தடுத்து கொலைகள் நடந்து வந்ததால், பாதுகாப்பைப் பலப்படுத்த பாகிஸ்தானிய ராணுவத் துருப்புகள் சென்ற மாதம் அங்கு அனுப்பி வைக்கப்பட்டன. கொலைகளுக்குப் போராளிகளே காரணம் என்று நம்பப்பட்டது.


இதற்கிடையே, குவெட்டாவில் திங்கட்கிழமை நடந்த வன்செயலில் மூன்று சியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டதோடு ஒருவர் காயமடைந்தார். இத்தாக்குதல்களுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் குவெட்டாவில் சியா முஸ்லிம்களுக்கும் சுணி முஸ்லிம்களுக்கும் இடையில் பல காலமாக வன்செயல் நடந்து வருகிறது. பாகிஸ்தானில் வாழும் 160 மில்லியன் மக்களில் சுமார் 20 விழுக்காட்டினர் சியா முஸ்லிம்கள்.


இந்நிலையில், பாகிஸ்தானிய தலிபான் படையின் தலைமைப் பேச்சாளர் என நம்பப்படும் ஆடவரைப் பாகிஸ்தானிய ராணுவம் கைது செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தெஹ்ரிக் தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் பேச்சாளரான மௌலவி ஒமர், ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள மொஹ்மந்த் பழங்குடி வட்டாரத்தில் பிடிபட்டார். அண்மையில் கொல்லப்பட்ட தலிபான் தலைவர் பைதுல்லா மெஹ்சுத்தின் முக்கிய ஆதரவாளர் இவர் என்று கூறப்படுகிறது. “மிக மிக முக்கியமான ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்” என்று மேஜர் ஃபசால் உர் ரஹ்மான் ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

மூலம்[தொகு]