உள்ளடக்கத்துக்குச் செல்

பாக்கித்தானின் முன்னாள் தலைவர் முசாரப் மீது கொலைக் குற்றச்சாட்டு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், செப்டெம்பர் 2, 2013

பாக்கித்தானின் முன்னாள் அரசுத்தலைவர் பெர்வேசு முசாரப்பிற்கு எதிராகப் புதிய கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.


தற்போது வீட்டுக் காவலில் உள்ள முசாரப் ஏற்கனவே முன்னாள் தலைவர் பெனசீர் பூட்டோ, மற்றும் பலோக் இனத் தலைவர் ஆகியோரின் படுகொலைகளுக்காகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 2007 ஆம் ஆண்டில் பாக்கித்தானின் உயர் நீதிபதியைப் பதவிநீக்கம் செய்தமை போன்ற குற்றங்களும் சுமத்தப்பட்டுள்ளன.


தம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நிராகரித்துள்ள முசாரப், இவை அனைத்து தன்னை அரசியல் ரீதியாகப் பழி வாங்கு நடவடிக்கை எனக் கூறியுள்ளார்.


2007 ஆம் ஆண்டில் இசுலாமாபாதில் செம்மசூதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அப்துல் ரசீத் காசி என்ற மதகுரு கொல்லப்பட்டமை தற்போது முசாரப் மீது சுமத்தப்பட்டுள்ளது. பாக்கித்தானிய இராணுவத்தினரின் இத்தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.


முன்னாள் இராணுவ ஆட்சியாளரான பெர்வேசு முசாரப் இவ்வாண்டு ஆரம்பத்தில் நாடு திரும்பியிருந்தார். தற்போது இவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.


1999 ஆம் ஆண்டில் இராணுவப் புரட்சியின் மூலம் பிரதமர் நவாஸ் செரீபின் ஆட்சியைக் கலைத்து அரசுத்தலைவர் ஆனார். ஒன்பதாண்டுகள் ஆட்சியில் இருந்த இவர் தேர்தலில் தோற்ற பின்னர் நாட்டை விட்டு வெளியேறி துபாய், மற்றும் லண்டனில் தங்கியிருந்தார்.


தேர்தலில் போட்டியிடுவதற்காக மீண்டும் நாடு திரும்பினார், ஆனாலும், இவர் மீது பல தேசத்துரோகக் குற்றங்கள் சுமத்தப்பட்டு தேர்தலில் பங்குபற்றுவதில் இருந்து தடுக்கப்பட்டார்.


மூலம்

[தொகு]