உள்ளடக்கத்துக்குச் செல்

பாக்கித்தானில் அரசியல் நெருக்கடி

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சனவரி 13, 2012

பாக்கித்தானில் அரசு, நீதித்துறை மற்றும் ராணுவம் இடையிலான மோதல்கள் முற்றி வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.


இராணுவம் ஆட்சியக் கைப்பற்றுவதைத் தடுப்பதற்காக அமெரிக்காவின் உதவியை பாக்கித்தான் நாடியதாகக் கூறப்படும் "மெமோகேட்' சர்ச்சை, அதிபர் உள்ளிட்ட உயர் பதவியில் இருப்பவர்கள் மீதான ஊழல் வழக்குகள் தொடர்பாக நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என பிரதமர் யூசுப் ராஸா கிலானிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம், ராணுவத்துக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் பாதுகாப்புச் செயலர் நயீம் கலீத் நீக்கம் போன்ற காரணங்களால் அரசியல் பரபரப்பு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், பாக்கித்தான் அரசுத்தலைவர் ஆசிப் அலி சர்தாரி நேற்று வியாழக்கிழமை துபாய் சென்றுள்ளார். நெருங்கிய நண்பரின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற பின் இன்று வெள்ளிக்கிழமை அவர் நாடு திரும்புவார் என்று கூறப்படுகிறது. நாட்டில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவும்போது, அதிபர் வெளிநாட்டுக்குச் சென்றிருப்பது நெருக்கடியை மேலும் அதிகரித்திருக்கிறது. ஆட்சியை ராணுவம் கைப்பற்றக்கூடும் என்கிற அச்சமும் ஏற்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு மே மாதம் ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்ட பிறகு, அரசை இராணுவம் கைப்பற்றும் சூழ்நிலை எழுந்தால் தங்களுக்கு உதவ வேண்டும் என அமெரிக்காவுக்கு அரசில் உள்ள சிலர் கடிதம் எழுதியதாகத் தகவல் வெளியானது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று அரசு கூறுகிறது. ஆனால், இந்த விவகாரம் குறித்து தனிப்பட்ட முறையில் உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என இராணுவத் தளபதி அஷ்பக் பர்வீஸ் கயானியும், உளவுத் துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தலைவர் அஹமட் சுஜா பாஷாவும் தெரிவித்தனர்.


இந்நிலையில் பல்வேறு ஊகங்களுக்கு மத்தியில், ராவல்பிண்டியில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் ராணுவத்தின் மூத்த தளபதிகளுடன் ராணுவத் தலைமைத் தளபதி அஷ்ஃபக் பர்வீஸ் கயானி வியாழக்கிழமை மட்டும் இரண்டுமுறை அவசர ஆலோசனை நடத்தினார். நாடு முழுவதும் இருந்து மூத்த ராணுவ அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்ததாகக் கூறப்படுகிறது. எனினும் இந்தக் கூட்டங்கள் குறித்து ராணுவத் தரப்பில் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.


அதே நேரத்தில் நாடாளுமன்றத்தின் தேசியப் பேரவை (மக்களவை) கூட்டத்தை பிரதமர் கிலானி அவசரமாக நேற்று கூட்டினார். மறுபுறமாக நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர பாக்கித்தான் முஸ்லிம் லீக் (என்) தலைவர் நவாஸ் செரீப் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.


மூலம்

[தொகு]