பாக்கித்தான் சந்தைக் குண்டுவெடிப்புகளில் 57 பேர் உயிரிழப்பு
- 26 நவம்பர் 2017: இசுலாமாபாத் முற்றுகையை முறியடிக்க இராணுவம் வரவழைப்பு
- 13 ஏப்பிரல் 2017: ஆப்காத்தானில் அமெரிக்கா அனைத்து குண்டுகளின் தாய் எனப்படும் பெரும் வெடிகுண்டை போட்டது
- 17 பெப்பிரவரி 2017: பள்ளிவாசல் தாக்குதலை தொடர்ந்து பாக்கித்தான் 100இக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கொன்றது
- 25 அக்டோபர் 2016: பாக்கித்தானில் காவலர் பயிற்சி கல்லூரியை மூன்று தற்கொலை தாரிகள் தாக்கியதில் பலர் பலி
- 29 செப்டெம்பர் 2016: பாக்கித்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்தியா ஊடுறுவி தாக்கியது
சனி, சூலை 27, 2013
பாக்கித்தானின் வடக்கே ஆப்கானித்தான் எல்லைப் பகுதியில் உள்ள பராச்சினார் என்ற இடத்தில் சந்தை ஒன்றில் இன்று நிகழ்ந்த இரட்டைக் குண்டுவெடிப்புகளில் குறைந்தது 57 பேர் கொல்லப்பட்டனர்.
இரண்டு குண்டுகளும் இரண்டு வெவ்வேறு இசுலாமியப் பள்ளிவாசல்களுக்கு அருகே இடம்பெற்றுள்ளன. 150 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். ரமழான் நோன்புக்காக உணவுப் பொருட்களை வாங்குவதற்கு சந்தையில் பெருமளவு மக்கள் கூடியிருந்த நேரத்திலேயே இக்குண்டுவெடிப்புகள் இடம்பெற்றன.
ஒரு குண்டு மோட்டார் சைக்கிளின் அடியில் பொருத்தப்பட்டிருந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இளம் வயதுப் பையன் ஒருவன் "கடவுள் பெரியவர்" எனக் கூவிக் கொண்டிருந்த போது இரண்டாவது குண்டு வெடித்ததாக நேரில் கண்ட ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
குராம் என்ற பழங்குடியினர் வாழும் பாக்கித்தானியப் பிரதேசம் ஆப்கானித்தானால் சூழப்பட்டது. இதன் மேற்கு முனை ஆப்கான் தலைநகர் காபூலில் இருந்து 90 கிமீ தொலைவிலேயே உள்ளது. இங்கு சியா முஸ்லிம்களே பெருமளவு வசிக்கின்றனர். பாக்கித்தானில் இவர்கள் சிறுபான்மையினம் ஆகும். சுன்னி இசுலாமியர்கள் இவர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
நேற்று வெள்ளிக்கிழமை அயலில் உள்ள கைபர் என்ற பிரதேசத்தில் தீவிரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் 20 பேரின் இறந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கடந்த ஐந்து நாட்களாக தீவிரவாதிகளைத் தேடும் பணி அரசுப் படையினர் முன்னெடுத்து வந்தனர். படையினரின் தாக்குதலிலேயே இவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
மூலம்
[தொகு]- Pakistan violence: Deadly bombings in Parachinar market, பிபிசி, சூலை 27, 2013
- Twin suicide attacks kill 57 in Pakistan market, டெலிகிராப். சூலை 27, 2013