பாக்கித்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி பதவியில் நீடிக்க உச்ச நீதிமன்றம் தடை

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சூன் 20, 2012

பாக்கித்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி பிரதமர் பதவியில் நீடிக்க அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க ஆளும் பாக்கித்தான் மக்கள் கட்சி இன்று புதன்கிழமை கூடுகிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பை தான் ஏற்றுக்கொள்வதாக பாக்கித்தான் மக்கள் கட்சி அறிவித்துள்ளது.


யூசுப் ரசா கிலானி

நீதிமன்ற உத்தரவை அடுத்து பாக்கித்தான் சனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உருசியாவுக்கான தனது பயணத்தை இடைநிறுத்தியுள்ளார். சனாதிபதிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பிலான வழக்குகளை மீண்டும் விசாரிப்பதற்கு கிலானி மறுத்தததை அடுத்து கிலானிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றம் இரண்டு மாதங்கள் முன்பு அவர் மீதான குற்றத்தை உறுதி செய்து, கிலானிக்கு நீதிமன்றம் கலையும் வரையான தடுப்புக்காவலை விதித்தது.


"'மேன்முறையீட்டு மனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே சயீட் யூசுப் ரசா கிலானி, மஜ்லிஸ் ஈ சூரா (நாடாளுமன்ற) அங்கத்தவராக பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர்'" என பிரதம நீதியரசர் இப்திகார் அலி சௌத்திரி நீதிமன்றத்தில் அறிவித்தார். "அவர் பிரதமர் பதவியிலிருந்தும் ஓய்வுபெற்றுள்ளார். தற்போது பிரதமர் பதவி வெற்றிடமாகவுள்ளது" எனவும் பிரதம நீதியரசர் தெரிவித்தார்.


பாக்கித்தானில் அரசியல்வாதிகளுக்கும் நீதித்துறைக்கும் இடையே நடந்துவரும் கடுமையான மோதல்களின் தொடர்ச்சியே நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


மூலம்[தொகு]