பாபநாசத்தை அடுத்த உத்தாணியில் 9-ம் நூற்றாண்டின் அபூர்வ சிலைகள் கண்டுபிடிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

பாபநாசத்தை அடுத்த உத்தாணியில் 9-ம் நூற்றாண்டின் அபூர்வ சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன[தொகு]

அபூர்வ சிலைகள்[தொகு]

சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் தஞ்சை பக்கமுள்ள பாபாசத்தை அடுத்த உத்தாணி என்ற கிராமத்தைச் சேர்ந்த வாயிற் காப்பாளர் சிற்பம் உள்ளது. இதனைச் சேர்ந்த பிற சிற்பங்கள், ஆலயத்தை தேடி உத்தாணியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அப்போது ஒரு தோப்பினில் கோவில் முற்றிலும் அழிந்து போன நிலையில் தனிச் சிற்பங்களாக அம்மன், மகேஸ்வரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி, லிங்கம் மற்றும் இரு அபூர்வ சிலைகள் கிடைத்தன.

3 திருமுகங்கள்[தொகு]

இதுகுறித்து தொல்லியலாளர் கூறியதாவது:- அந்த சிலைகளில் ஒன்று உச்சியில் சுடர் கொழுந்துகள் முடியாக ஒன்றிணைந்த நிலையில், 3 திருமுகங்களுடன் வலது முன் கரம் அபய முத்திரையிலும், வலது பின் கரத்தில் சத்தியும், இடது முன்கை தொடை மீது வைத்துள்ள நிலையிலும், இடது பின் கை வச்சிரப் படையும் கொண்டு சுகாஹசனமிட்ட நிலையில் தாமரை பீடத்தின் மீது விளங்குகிறார்.இது எரியங்கி, ஈஸ்வரர், வேலனார், ஆகியோரின் அம்சங்களைக் கொண்ட ஓர் புதுமைப் படைப்பாக காட்சி அளிக்கிறது. தமிழகத்தில் வேறெங்கும் இது போல் இருப்பதாகத் தெரியவில்லை.

சுஹாசன சிவன்[தொகு]

மற்றொரு தெய்வச் சிலையும் வெகு அபூர்வமாக ஓரிரு ஊர்களில் மட்டும் காணக் கூடியது. ஜடாபாரம் தலை மீது திகழ, பின் கரங்களில் மழுவும், மூவிலைச் சூலமும், முன் வலது காக்கும் கரமாகவும், முன் இடது கை தொடை மீது ஏந்தும் நிலையிலும் வைத்து இலகு இருக்கையில் பத்ம பீடத்தின் மீது காட்சியளிக்கிறார். இது சுஹாசன சிவன் மற்றும் ஏக முக சதுர்புஜ சண்டீசருக்கு உரிய அம்சங்களை தாங்கியதாக படைக்கப்பட்டுள்ளது.

முத்தரையர் மன்னர் ஏற்படுத்திய ஊர்[தொகு]

இருப்பிடத்தை வைத்து இத் தெய்வம் எது என்பதனை கணிக்க இயலும். ஆலயம் அழிந்துப் போன நிலையில் அது சாத்தியமில்லாது போய் விட்டது. சுமார் 3 அடி உயரமுள்ள இவை அனைத்தும் கி.பி 9 ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மருவி வழங்கும் உத்தாணி என்பது உத்தமதாணி என்ற பெயரில் அந்நாளைய முத்தரையர் மன்னர் ஏற்படுத்திய ஊர் என்பதை கல்வெட்டுச் சான்றுகள் மூலம் அறிய முடிகிறது. [1]

மூலம்[தொகு]
  1. 9-ம் நூற்றாண்டின் அபூர்வ சிலைகள் கண்டுபிடிப்பு - தினச்செய்தி