பாலி குண்டுவெடிப்புக்கு காரணமான போராளி கொல்லப்பட்டார்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், மார்ச்சு 10, 2010

இந்தோனேசியாவின் பாலித் தீவில் 2002ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாகத் தேடப்பட்டு வந்த முக்கிய போராளியான டல்மடின் என்பவரை இந்தோனீசியக் கவல்துறையினர் சுட்டுக் கொன்றுவிட்டதாக அந்நாடு உறுதிப்படுத்தியிருக்கிறது.


ஆஸ்திரேலியாவிற்கு 3 நாள் அரசுப்பணிச் சுற்றுலாவில் இந்தோனேசிய அரசுத்தலைவர் சுசீலோ யுதயோனோ இதனைத் தெரிவித்தார். தாம் மூன்று ஜமா இசுலாமியா போராளிகளை தேடுதல் நடவடிக்கை ஒன்றில் சுட்டுக் கொன்றதாக காவல்துறையினர் நேற்று அறிவித்திருந்தனர். இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் டல்மடீனும் ஒருவர் என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.


டல்மடீனின் இறப்பு பற்றிய அறிவிப்பு ஆஸ்திரேலியாவில் பெரும் வரவேற்பைப் பெறும் எனக் கருதப்படுகிறது. பாலிக் குண்டுவெடிப்பில் இறந்த 202 பேரில் அரைவாசிக்கும் அதிகமானோர் ஆஸ்திரேலியர்கள் ஆவர்.


இசுலாமியப் போராளிகளுக்கு எதிராக இந்தோனேசியா நடத்திவரும் போராட்டத்தில் இவரது இறப்பு முக்கிய அங்கம் வகிக்கக்கூடும் என்று காவல்துறையினரும் ஆய்வாளர்களும் நேற்று கூறினர்.


பன்டன் மாவட்டத்தின் பமுலாங் வட்டாரத்தில் காவல்துறையினர் திடீர் சோதனைகள் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.


சுட்டுக் கொல்லப்பட்டவர் ஜமா இசுலாமியா போராளிகள் அமைப்பைச் சேர்ந்த டல்மடின் என நம்பப்படுகிறது. இவருக்கும் “காவல்துறையினர் புலன் விசாரணை நடத்திவரும் பயங்கரவாதச் சம்பவங்களுக்கும்” தொடர்பிருப்பதாக நம்பப்படுவதாகத் தேசிய காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்தார்.


ஆனால், சடலத்தை உறுதியாக அடையாளம் காண ஔரிரு நாட்கள் ஆகக்கூடும் என்றும் அவர்கள் கூறினர். இருப்பினும், சுட்டுக் கொல்லப் பட்டவர் “டல்மடின் என்பதில் காவல்துறையினருக்கு வலுவான சந்தேகம்” இருப்பதாகத் திடீர் சோதனைகளில் சம்பந்தப்பட்டிருந்த ஒருவர் ராய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.


அச்சே மாகாணத்தில் கடந்த மாதம் இசுலாமிய தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் என்று கூறப்படும் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இந்தோனேசியப் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான தேடுதல்களை நடத்தி வருகிறார்கள்.

மூலம்[தொகு]