பிரான்சின் முன்னாள் பிரதமருக்கு எதிராக வழக்கு
திங்கள், செப்டம்பர் 21, 2009 பிரான்ஸ்:
பிரான்சின் முன்னாள் பிரதமர் டொமினிக் டி வில்பா, தமது பழைய அரசியல் எதிரியான தற்போதைய பிரான்ஸ் அதிபர் நிக்கொலா சார்கோசியைக் களங்கப்படுத்த முயன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணை பாரிசில் துவங்கியிருக்கிறது.
நிக்கோலா சர்கோசி முன்பு உள்துறை அமைச்சராக இருந்தபோது அவரை களங்கப்படுத்த டி வில்பா முயன்றதாக இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அதிபர் நிக்கோலா சர்கோசி விரும்பியதனாலேயே இந்த வழக்கின் விசாரணையை தாம் சந்திக்க நேர்ந்திருப்பதாக டி வில்பா நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார். இந்த வழக்கிலிருந்து தாம் முழுமையாக விடுவிக்கப்படுவோம் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.
இந்த வழக்கு 2004 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் அவர்கள் கட்சியின் அதிபர் பதவிக்கான வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதற்கு போட்டியிட்ட காலகட்டம் தொடர்பானது.
அப்போது சர்கோசிக்கு எதிரான நீதிமன்ற ஊழல் புலனாய்வில் டி வில்பா தலையிட்டு அதன் மூலம் சர்கோசியின் நற்பெயரை கெடுக்க முயன்றதாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர் குற்றவாளியாகக் காணப்பட்டால் 45,000 யூரோக்கள் தண்டமும், கூடியது ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கப்படலாம்.