பிரெஞ்சு இரீயூனியன் தீவை சூறாவளி பெஜிசா தாக்கியது, பெரும் சேதம்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சனவரி 2, 2014

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள பிரெஞ்சுத் தீவான இரீயூனியனை இன்று பெஜிசா எனப் பெயரிடப்பட்ட சூறாவளி தாக்கியதில் 14 பேர் காயமடைந்தனர். பல குடியிருப்பு மனைகள், மற்றும் மின்சார இணைப்புகள் சேதமடைந்தன.


சூறாவளியின் தாக்கத்தில் உருவான காற்று மணிக்கு 150 கிமீ வேகத்தில் தாக்கியது. கரையில் இருந்து 15 கிமீ தூரத்தில் அலைகள் பெருக்கெடுக்க ஆரம்பித்தன.


கிட்டத்தட்ட 800,000 மக்கள்தொகை கொண்ட இத்தீவில் 90,000 வீடுகளில் குடிநீர் வழங்கல், மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.


ரோலண்டு காரொசு விமான நிலையம் மூடப்பட்டது. உள்ளூர்ப் போக்குவரத்து, மற்றும் அஞ்சல் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.


பிரெஞ்சு நாட்டினால் நிருவகிக்கப்படும் ரீயூனியன் மடகாசுகருக்குக் கிழக்கே, மொரிசியசிலிருந்து 200கிமீ (120 மைல்) தென்மேற்காக அமைந்துள்ளது. இங்கு ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழர் வம்சாவழிகள் வாழ்கின்றார்கள்.


மூலம்[தொகு]