உள்ளடக்கத்துக்குச் செல்

புறக்கணிக்கப்படுகிறதா திருவள்ளுவர் கோவில்?

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சூலை 31, 2009, சென்னை, தமிழ்நாடு:


மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர்- வாசுகி கோயில் பல ஆண்டுகளாகப் பராமரிக்கப்படாததால், பொலிவை இழந்து வருகிறது.


உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் பிறந்த இடம் மயிலாப்பூர். அவர் அவதரித்த இடத்திலேயே வள்ளுவருக்கு தனிக் கோயில் எழுப்பப்பட்டுள்ளது.


இக் கோயிலின் மைய மண்டபம் அருகே இவர் பிறந்த இடத்தில் இருந்த புன்னை மரம் இன்றும் "தல விருட்சமாக' உள்ளது. இந்த மரத்தைச் சுற்றி கடந்த 6.5.1935-ல் மேடை அமைக்கப்பட்டு, செப்புத் தகடு கவசமாகப் பூணப்பட்டது.

எம்.கே. கன்னியப்பநாயகர், டி. சுப்பிரமணிய செட்டியார் ஆகியோர் இந்த மேடையை அமைத்ததாக தெரியவந்துள்ளது.


1974-ல் திருப்பணி


இதன்பின் இக் கோயிலின் திருப்பணி கடந்த 27.4.1973-ல் முதல்வர் கருணாநிதி தலைமையில் தொடங்கியது. திருப்பணிகளுக்கான புரவலராகவும் கருணாநிதியே பொறுப்பேற்றார்.


அப்போதைய அறநிலையத் துறை அமைச்சர் மு. கண்ணப்பன், கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் இவ் விழாவில் பங்கேற்றனர்.


இக் கோயிலின் வளாகத்தில் உள்ள ஸ்ரீகாமாட்சி- ஏகாம்பரநாதர் கோயில் திருப்பணியும் தொடங்கப்பட்டது. திருப்பணிக் குழுத் தலைவராக குன்றக்குடி அடிகளார் இருந்துள்ளார். திருப்பணிகள் நிறைவேற்றப்பட்ட பின், கடந்த 23.01.2001-ல் திருவள்ளுவர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. இதில் முதல்வர் உள்ளிட்ட பலர் பங்கேற்றதாக கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது.


அறநிலையத் துறையின் பராமரிப்பில்...


மயிலாப்பூர் ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மன் கோயிலின் சார்புக் கோயிலாக உள்ள வள்ளுவர் கோயில் தற்போது அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ளது. இக் கோயிலின் உள்ளே உள்ள கருவறையில் வள்ளுவர் எழுந்தருளியுள்ளார். அருகில் வள்ளுவரின் மனைவி வாசுகிக்கும் தனி சன்னதி எழுப்பப்பட்டுள்ளது.

பகல் நேரத்தில் நாய்களின் கூடாரமாகவே இக் கோயில் வளாகம் மாறிவிட்டது. வள்ளுவர் அவதரித்த புன்னை மரத்தடி மேடையில் தனது பெற்றோரான ஆதி-பகவனின் திருக்கரங்களில் மழலையாக உள்ளது போல சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இச்சிலைகள் மீது பறவைகளின் எச்சமே பரவிக் காணப்படுகிறது. புண்ணிய தீர்த்தம் வழங்கிய கிணறு தற்போது "நல்லதங்காள் கிணறு' போல பராமரிப்பின்றி பாழடைந்துள்ளது.


கோயிலின் வெளிப்புறத்தில் 2 தோரண வாயில்கள் வள்ளுவர்-வாசுகியின் சிற்பங்களுடன் அமைக்கப்பட்டிருந்தும், சுண்ணாம்புப் பூச்சு கண்டு ஆண்டுக் கணக்கில் ஆனது போல பொலிவிழந்துள்ளது.


இக் கோயில் வளாகத்தில் தீவைத்து எரிக்கப்பட்ட அட்டைகளின் சாம்பல் குவியல்களாக எஞ்சியுள்ளன. மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளும் சேதமுற்றுள்ளன. சுற்றுச் சுவர்களில் போதிய விளக்குகள் இல்லாததால், இரவில் இக் கோயில் இருளில் மூழ்கியுள்ளது.


சிதிலமடைந்த நிலையில் நூலகம்


கோயில் வளாகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே தனி நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகம் கடந்த 2 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது என இப் பகுதி மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். பராமரிக்கப்படாததால் இந்த நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த திருக்குறளும், குறள் நெறி விளக்கும் அரிய ஆய்வு நூல்களும் தூசு படிந்து, செல்லரித்து சேதமுற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.


கோயிலின் அருகில் கட்டப்பட்டுள்ள வள்ளுவர்-வாசுகி திருமண மண்டபம் அரசுக்கு தொடர்ந்து வருவாய் ஈட்டித் தருகிறது. ஆனால், அதைப் பராமரிக்கும் அளவு கூட வள்ளுவர் கோயில் பராமரிக்கப்படாமல் உள்ளது. கோயிலின் பிரதான வாயிலின் இருகே பிரம்மாண்ட குடிநீர்த் தொட்டி நிறுவப்பட்டிருந்தது. தற்போது, இது பயன்படுத்தப்படததால் "துவார பாலகர்' போல் நிற்கிறது.

குப்பை சேகரிக்கும் இடமாக...


இதன் அருகே குப்பைக் குவியல்கள் கொட்டப்பட்டு, துப்புரவு வாகனங்கள் மொத்தமாக சேகரித்துச் செல்லும் அவல நிலை உள்ளது. இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதோடு, பொது சுகாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

புறக்கணிக்கப்படுகிறதா திருவள்ளுவர் கோவில்?


மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் குறித்து இளைய தலைமுறையினருக்கு எவ்வித தகவலும் கிடைக்க இயலாத நிலை உள்ளது.


அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ள இக் கோயிலுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு எதுவும் இதுவரை இல்லை.


அறநிலையத் துறை மற்றும் சுற்றுலாத் துறையின் வரைபடங்கள், விளக்கக் கையேடுகள் மற்றும் இணையதளங்களில் கூட, வள்ளுவர் திருக்கோயில் பற்றிய விவரங்கள், படங்கள் எதிலும் இடம் பெறவில்லை.


கோயில்களின் தல வரலாற்றிலும் முழுமையான தகவல்கள் ஏதும் இல்லை. மாநகராட்சி பள்ளிகள் முதல் தமிழகத்தின் அனைத்து பள்ளி மாணவர்களும் இக் கோயிலுக்கு, கல்வி சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். சுற்றுலாத் துறை இப்போது தினமும் இயக்கும் சிற்றுந்துகள் இக் கோயிலுக்கும் பயணிகளை அழைத்து வர வேண்டும்.


பள்ளிகளில் பாடநூல்களிலும் இக் கோயிலைப் பற்றிய செய்திகள் விரிவாக இடம் பெற வேண்டும். தமிழக மக்கள், தமிழறிஞர்கள், இசை, நடனக் கலைஞர்கள் பெருந்திரளாக பங்கேற்கும் வகையில் ஆண்டுதோறும் வள்ளுவருக்கு பிரம்மாண்ட விழா நடத்த அரசு நடவடிக்கை என்பதே மக்களின் விருப்பம். சென்னை மயிலையில் பிறந்த வள்ளுவருக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில், இதை அரசு நிறைவேற்றுமா?

மூலம்

[தொகு]