புலிகளுக்கு ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்ட பால்ராஜ் நாயுடு குற்றவாளி என அமெரிக்கா தீர்ப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், அக்டோபர் 20, 2010


விடுதலைப் புலிகளுக்கு அமெரிக்காவில் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட சிங்கப்பூரைச் சேர்ந்த பால்ராஜ் நாயுடு குற்றவாளி என அமெரிக்காவின் பால்ட்டிமோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


பால்ராஜ் நாயுடுவும் வேறு நான்கு பேரும் 28 தொன் எடையுள்ள அமெரிக்கத் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை சட்டத்திற்குப் புறம்பான முறையில் வாங்க முயற்சி செய்தது சாட்சியங்கள் மூலம் தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஆயுதக் கொள்முதலுக்காக பால்ராஜுக்கு, விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் முன்பணமாக 326,700 சிங்கப்பூர் வெள்ளியைக் கொடுத்துள்ளனர். வாங்கப்படவிருந்த வெடிபொருட்களின் மதிப்பு 1.176 மில்லியன் டாலர்கள் என்று பால்டிமோர் நீதித்துறை தெரிவித்துள்ளது.


சிங்கப்பூரில் தொடங்கப்பட்ட சீர்திருத்தக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர் பால்ராஜ் (வயது 48). 2009 செப்டம்பர் 22ம் நாள் சிங்கப்பூரில் உள்ள அவரது வீட்டில் அவர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இதன் பின்னர் மேலதிக விசாரணைக்காக டிசம்பர் 18ம் தேதி அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


அவருடன் இணைந்து செயல்பட்ட இலங்கையின் திருநாவுக்கரசு வரதராசாவுக்கு (40 வயது) 57 மாத சிறைத்தண்டனையும், இந்தோனேசியாவின் 73 வயது ஹாஜி சுபான்டிக்கு 37 மாத சிறைத் தண்டனையும், ஓய்வுபெற்ற இந்தோனேசிய அதிகாரி 62 வயது எரிக் வோட்டுல்லொ என்பவருக்கு 30 மாத சிறைத் தண்டனையும் 2008ல் விதிக்கப்பட்டது.


பால்ராஜ் நாயுடுவுக்கு ஆகக்கூடியது 15 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட சட்டத்தில் இடமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கையில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் 1976ஆம் ஆண்டு முதல் தனி நாடு கோரி போராடி வந்தது.


மூலம்[தொகு]