உள்ளடக்கத்துக்குச் செல்

பெங்களூவில் திருவள்ளுவர் சிலை திறப்பு

விக்கிசெய்தி இலிருந்து
கருநாடக மாநிலம்

ஞாயிறு, ஆகத்து 9, 2009, பெங்களூரு, இந்தியா:


இந்தியாவின் பெங்களூரு நகரத்தில் பல ஆண்டு கால சர்ச்சைக்கு பின்னர் திருவள்ளுவர் சிலை கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையில் தமிழக முதல்வர் மு. கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


இந்த சிலை திறப்புக்கு கடந்த காலங்களில் கன்னட அமைப்புகள் சிலவற்றினால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தன.


பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து எதிர்வரும் 13 ம் தேதி சென்னையில் கன்னட கவிஞர் சர்வஞ்னர் அவர்களின் சிலை திறந்து வைக்கப்படும் என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.


இந்த சிலை திறப்பு விழாவில் பெரிய அளவில் சமூக அரசியல் முக்கியத்துவம் இருப்பதாக தாம் கருதவில்லை என்று பெங்களூரு பல்கலைக்கழகத்தின் ஒய்வுப்பெற்ற சமூகவியல் பேராரசிரியர் ஜிஎஸ்ஆர் கிருஷ்ணன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். எனினும் கடந்த காலங்களில் இரண்டு மூன்றுமுறை சிலையை நிறுவ வேண்டும் என்று விரும்பி அது நடைபெற முடியாமல் அதற்கு பெங்களூருவில் எதிர்ப்பு எழுந்ததால் தற்போதைய சிலை திறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கூறினார்.


கர்நாடகத்தில் திருவள்ளுவரை தெரிந்த அளவுக்கு தமிழகத்தில் சர்வஞ்னரை பற்றி தெரிந்து இருக்காது என்று கூறும் அவர் சர்வஞ்னரும் திருவள்ளுவரை ஒத்த ஒரு சிந்தனையாளர் தான் என்றும் வாழ்க்கை நெறிகளை வள்ளுவரை போலவே இரண்டு அடிகளில் பாடியவர் என்றும் அவர் கூறினார்.

அப்போது அவர் பேசியது:


"பெங்களூரில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை கடந்த 18 ஆண்டுகளாக மூடியிருந்தது. இந்தச் சமயத்தில் கர்நாடகத்தைச் சேர்ந்த பலர் என்னைச் சந்தித்தனர். அப்போது பெங்களூர் உள்பட கர்நாடகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைப்புவிடுத்தனர்.


ஆனால் மூடியிருக்கும் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்ட பிறகுதான் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் என்று சபதம் செய்திருந்தேன். கடந்த 18 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்த எனது சபதத்தை இன்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா நிறைவேற்றிவிட்டார். இதற்காக எனது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


திறப்பு விழாவில் கருணாநிதி உரையாற்றியபோது:


இன்று பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டுள்ளது. அதுபோல் ஆகஸ்ட் 13-ம் தேதி சென்னையில் சர்வக்ஞர் சிலை திறக்கப்படுகிறது. இந்த 2 நிகழ்ச்சிகளும் இரு மாநில மக்களின் இதயங்களைத் திறக்கும் விழா.


திருவள்ளுவர் சிலை இங்கு திறக்கப்படும் நேரத்தில் கன்னடக் கவிஞர் சர்வக்ஞரின் போதனைகள் அடங்கிய "உரைப்பா' என்ற புத்தகம் தமிழில் இறையடியான் என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அப் புத்தகம் சர்வக்ஞர் சிலை திறப்பு விழாவில் வெளியிடப்பட உள்ளது.


சென்னையில் சர்வக்ஞர் சிலையைத் திறக்க எந்தத் தமிழனும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. கன்னடக் கவிஞரின் புத்தகத்தைத் தமிழில் வெளியிடக்கூடாது என்றும் கூறவில்லை.


சர்வக்ஞர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்று எந்தத் தமிழனும் கூறவில்லை. சர்வக்ஞரின் கருத்துகளை நான் படித்துள்ளேன். "ஆடு முட்டாத சொப்பு இல்லை' (ஆடு தின்னாத கீரை இல்லை). அதுபோல் சர்வக்ஞர் சொல்லாத போதனைகள் இல்லை. புரட்சிகரமான, முற்போக்கான கருத்துகளை சர்வக்ஞர் சொல்லியுள்ளார்.


கடந்த 18 ஆண்டுகளாக கர்நாடக தமிழ்ச் சங்கத்தார் பல முதல்வர்கள் முதல் பிரதமர், குடியரசுத் தலைவர் வரை சந்தித்து திருவள்ளுவர் சிலையைத் திறக்க மனு கொடுத்தும் திறக்க முடியவில்லை. திருவள்ளுவர் சிலை திறப்புக்கு என்னையும் எடியூரப்பாவையும் சேர்த்துவைத்த நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. மருத்துவப் பரிசோதனைக்காக அண்மையில் எடியூரப்பா சென்னை வந்திருப்பதாக அறிந்தேன். இதையடுத்து அவரைப் பார்க்க நான் விரும்பினேன். ஆனால் நான் மூத்தவர் என்பதால் என்னைப் பார்க்க எடியூரப்பாவே வீட்டுக்கு வந்தார். இது சகோதரப் பாசம். மக்கள் ஆதரவு பெற்றோர் யாராக இருந்தாலும், சமுதாயப் பணியில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் எனக்கு நண்பர். எடியூரப்பா எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் நானும் அவரும் இந்தியர் என்ற உணர்வு, இதற்கும் மேலாக மனிதர்கள் என்ற உணர்வு" என்றார் கருணாநிதி.

தொடர்புள்ள செய்திகள்

மூலம்