பெரியார் நூல்களை வெளியிடத் தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சூலை 27, 2009 சென்னை, தமிழ்நாடு:


திராவிடர் கழக நிறுவனர் பெரியார் தனது குடியரசு பத்திரிக்கையில் வெளியிட்ட கருத்துக்களைத் தொகுத்து வெளியிடுவதென்ற பெரியார் திராவிடர் கழகத்தின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.


பெரியாரின் எழுத்துக்களுக்கும், கருத்துக்களுக்கும் யாரும் தனிப்பட்ட முறையில் உரிமையோ, காப்புரிமையோ கோர முடியாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


வீரமணியுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறிய பலர் ஒன்றிணைந்து உருவாக்கியதே பெரியார் திராவிடர் கழகமாகும். 1925ம் ஆண்டிலிருந்து 1938ம் ஆண்டுவரை குடியரசில் வெளியான பெரியார் ஈ.வே.ராவின் கட்டுரைகள், கருத்துக்கள் அனைத்தையும் தொகுத்து வெளியிட முடிவுசெய்த. பெரியார் தி.கவின் திட்டம் குறித்த செய்திகள் வெளியானவுடன், அம்முயற்சிக்குத் தடைவிதிக்கக் கோரி சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் வாழ்நாள் செயலாளராகவும் இருக்கும் கி.வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.


பெரியாரின் எழுத்துக்களும், கருத்துக்களும் தங்கள் நிறுவனத்திற்கே சொந்தமானவை, அவற்றிற்கான காப்புரிமை தங்களுக்கே இருக்கிறது என வாதிட்டு மனுச்செய்தார் அவர்.


நீதிமன்றமும் அவரது வாதங்களை ஏற்று, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இடைக்காலத் தடை விதித்தது.


இந்தத் தடையை நீக்கக்கோரி பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்தனர்.


பிறகு வழக்கை விசாரித்த நீதிபதி கே.சந்துரு,பெரியார் திராவிடர் கழகத்திற்கு விதிக்கப்பட்ட இடைக் கால தடையை நீக்கியும், வீரமணி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தும் இன்று தீர்ப்பளித்தார்


மனுவை விசாரித்த பிறகு நீதிபதி அளித்த தீர்ப்பு:


பெரியார் "குடியரசு' இதழில் மதம் மற்றும் சமூக, பொருளாதார விஷயங்கள் குறித்து நிறைய எழுதியுள்ளார். இந்தப் படைப்புகளுக்கு பெரியார்தான் உரிமையாளர் ஆவார். எனவே, இந்த எழுத்துகளை மீண்டும் பதிப்பிப்பதற்கான உரிமை முழுவதும் பெரியாரிடமே உள்ளது.


எழுத்துகளுக்கான உரிமை அறிவுசார் சொத்துரிமையின்கீழ் வருகிறது. எனவே, இந்த உரிமையை மனுதாரரிடம் பெரியார் அளித்ததற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். பெரியார் தன் படைப்புகளுக்கான பதிப்புரிமையை கி. வீரமணியிடம் அளித்ததாக எந்த ஆவணங்களிலும் குறிப்பிடப்படவில்லை.


இதுதொடர்பாக, பெரியாரின் உயிலிலோ அல்லது வேறு ஆவணங்களிலோ எந்தக் குறிப்பும் இல்லை. பெரியாரின் எழுத்துகளுக்கான பதிப்புரிமை தன்னிடம் உள்ளது என்பதை மனுதாரர் நிரூபிக்கத் தவறியதால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.


பெரியாரின் எண்ணங்கள் மக்களைச் சென்றடைய, "குடியரசு' வின் பல இதழ்கள் இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளன. இது பெரியாரின் 130-வது ஆண்டு ஆகும். இந்நிலையில், அவரது எழுத்துக்கான பதிப்புரிமை தொடர்பான சட்ட விவாதம் வேதனையைத் தருகிறது என்று நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

மூலம்[தொகு]