பொலிவியத் தலைவர் பயணம் செய்த விமானத்தில் சோதனை, ஐநாவிடம் முறையிட முடிவு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சூலை 5, 2013

பொலிவியா அதிபர் பயணம் செய்த விமானத்தில் அத்துமீறி சோதனை நடத்தியதற்கு பொலிவியா அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது பற்றி ஐக்கிய நாடுகள் சபையில் புகார் செய்யப் போவதாக பொலிவியா அரசு அறிவித்துள்ளது.


அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்ட சினோடென் இப்போது உருசியாவின் தலைநகர் மாஸ்கோவில் உள்ள விமான நிலையத்தில் சர்வதேச பயணிகள் தங்கும் பகுதியில் மறைந்து இருக்கிறார். தனக்கு அரசியல் தஞ்சம் அளிக்கும்படி வெனிசுலா, கியூபா, பொலிவியா உள்ளிட்ட 20 நாடுகளுக்கு அவர் கோரிக்கை விடுத்து இருந்தார். சினோடெனுக்கு அரசியல் தஞ்சம் அளிக்க தயார் என்று பொலிவியா தலைவர் இவோ மொராலெஸ் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் பொலிவியா அரசுத்தலைவர் இவோ மொராலெஸ் மாஸ்கோவில் நடந்த எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டார். மாநாட்டில் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் கலந்து கொண்டார்.


மாநாடு முடிந்த பின்னர் பொலிவியா ஜனாதிபதி இவோ மொராலெஸ் தனி விமானத்தில் தாய்நாடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இவருடைய விமானம் தங்கள் நாட்டின் மீது பறக்க தடை விதிக்கப்படுவதாக பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுக்கல் நாடுகள் திடீரென்று அறிவித்தன. ஆஸ்திரியா நாட்டின் மீது பறந்து கொண்டிருந்த பொலிவியா ஜனாதிபதியின் விமானம் தலைநகர் வியன்னா விமான நிலையத்தில் கட்டாயமாக தரை இறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆஸ்திரியா போலீஸ் அதிகாரிகள் விமானத்தில் சோதனை நடத்த வந்தனர். இதற்கு பொலிவியா ஜனாதிபதி இவோ மொராலெஸ் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் ஆஸ்திரிய அதிகாரிகள் சினோடென் விமானத்தில் இருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனால் சோதனை நடத்துகிறோம் என்று கூறி சோதனை செய்தனர்.


ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. பின்னர் அவருடைய விமானம் புறப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.ஒரு நாட்டின் ஜனாதிபதி விமானத்தை வேறு ஒரு நாடு கட்டாயமாக தரை இறக்கி சோதனை நடத்தியது உலக நாட்டு தலைவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி பொலிவியா நாட்டு வெளியுறவு அமைச்சர் டேவிட் கூறும் போது, பொலிவியா ஜனாதிபதியின் விமானத்தில் ஸ்னோடென் இருக்கிறார் என்ற மாபெரும் பொய்யை கண்டுபிடித்தது யார் என்று தெரியவில்லை. இந்த பொய்யினால் எங்கள் நாட்டு ஜனாதிபதியின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை உருவானது என்று தெரிவித்தார். வெனிசுலா நாட்டு வெளியுறவு அமைச்சர் இலியாஸ் ஜூவா கூறும் போது, இதன் பின்னணியில் அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல் நாடுகள் உள்ளன. இந்த பிரச்சனையை நாங்கள் சும்மா விடப்போவதில்லை. லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் கரீபியன் நாடுகளிடம் கொண்டு செல்வோம் என்று ஆவேசத்துடன் தெரிவித்தார்.


அர்ஜென்டினா நாட்டு ஜனாதிபதி கிறிஸ்டினா கிரிச்னர் கூறுகையில், ஜனாதிபதி இவோ மொராலெஸ் விமானத்தை தரையிறக்கிய செயல் பைத்தியக்காரத்தனமானது. இந்த குற்றத்தை மன்னிக்க முடியாது என்றார்.


இந்த நிலையில் பொலிவியா துணை ஜனாதிபதி அல்வரோ கர்சியா கூறும்போது, எங்கள் ஜனாதிபதி விமானத்தை சர்வதேச விதிகளை மீறி கட்டாயமாக தரை இறக்கியது பற்றி ஐக்கிய நாடுகள் சபையில் புகார் செய்வோம். நாங்கள் ஒன்றும் ஐரோப்பிய நாடுகளின் காலனிகள் அல்ல. சில ஐரோப்பிய நாடுகள் தான் காலனி நாடுகளாக உள்ளன என்று காட்டத்துடன் தெரிவித்தார்.


மூலம்[தொகு]