உள்ளடக்கத்துக்குச் செல்

போக்லாந்து தீவில் பிரித்தானிய இராணுவ மயமாக்கல், அர்ச்சென்டீனா ஐநாவில் முறையிடவிருக்கிறது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், பெப்பிரவரி 8, 2012

சர்ச்சைக்குரிய போக்லாந்து தீவுகளைச் சுற்றிலும் பிரித்தானியா இராணுவ மயமாக்குதலில் ஈடுபட்டுள்ளது பற்றி ஐக்கிய நாடுகளில் தாம் முறையிடவிருப்பதாக அர்ஜென்டினா கூறியுள்ளது.


1982 ஆம் ஆண்டு போக்லாந்து போரில் போரிட்ட இராணுவத்தினர், முதுவர்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தில் உரையாற்றிய அர்ஜென்டீன அரசுத்தலைவர் கிறிஸ்டீனா பெர்னாண்டசு டி கிர்ச்னர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


அர்ஜெண்டீனாவுக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையில் போக்லாந்து தீவுகள் தொடர்பாக அண்மைக் காலத்தில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. போக்லாந்துக்கு எச்எம்எஸ் டாண்ட்லெசு என்ற புத்தம் புதிய அழிகலன் ஒன்றைத் அனுப்பவிருப்பதாக சென்ற மாதம் பிரித்தானியா அறிவித்திருந்தது. அத்துடன் பிரித்தானிய வான்படையில் உலங்குவானூர்தி இயக்குனராக இளவரசர் வில்லியம் போக்லாந்துக்கு அனுப்பப்பட்டார்.


மெர்க்கசூர் என்ற தென்னமெரிக்க வணிக நிறுவனம் போக்லாந்து கொடியுடன் செல்லும் கப்பல்களை தமது துறைமுகங்களூடாக செல்வதற்கு சென்ற மாதம் தடை விதித்திருந்தது.


ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், "போக்லாந்து மக்கள் பிரித்தானியர்கள். அவர்களது எதிர்காலத்தை அவர்களே தீர்மானிப்பார்கள். போக்லாந்து மக்கள் விரும்பினாலொழிய அர்ஜெண்டீனாவுடன் எவ்விதப் பேச்சுக்களிலும் தாம் ஈடுபடப் போவதில்லை," எனக் கூறியிருந்தது.


பிரேசில், உருகுவாய் போன்ற நாடுகள் இது விடயத்தில் ஆர்ஜெண்டீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றன. ஏற்கனவே போக்லாந்து கப்பல்கள் தமது துறைமுகங்களுக்கு வர அவர்கள் தடை விதித்துள்ளனர். சிலியின் வெளியுறவுத்துறை அமைச்சரும் அண்மையில் தமது ஆதரவைத் தெரிவித்திருந்தார்.


பிரித்தானியா 1833 ஆம் ஆண்டில் இருந்து போக்லாந்து தீவுகளைத் தம் வசம் வைத்திருக்கிறது. இத்தீவுகள் சுயாட்சி அரசைக் கொண்ட ஐக்கிய இராச்சியத்தின் கடல்கடந்த மண்டலமாகும். 1982 ஆம் ஆண்டு ஆர்ஜென்டீனா இத்தீவுகளை ஆக்கிரமித்தது. இதைத் தொடர்ந்து ஆர்ஜென்டீனாவுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்குமிடையே இரண்டு மாதங்களாக அறிவிக்கப்படாத போர் இடம்பெற்றது. இப்போரில் ஆர்ஜென்டீனாவின் தோல்வியுடன் தனது படைகளை அது பின்வாங்கிக் கொண்டது.


மூலம்[தொகு]