மன்னார் புதைகுழியில் மேலும் பல எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு
- 17 பெப்ரவரி 2025: இலங்கை அரசு நியமித்த நிபுணர் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்த்தப்படுகிறது
- 17 பெப்ரவரி 2025: 157 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களும் நவூரு தீவுக்கு அனுப்பப்பட்டனர்
- 17 பெப்ரவரி 2025: ஈழத் தமிழ் அகதிகள் 157 பேரும் கொக்கோசுத் தீவுக்கு அழைத்து வரப்பட்டனர்
- 17 பெப்ரவரி 2025: தஞ்சமடையச் சென்ற தமிழ் அகதிகளை ஆத்திரேலியா இலங்கைக்கு திருப்பி அனுப்பியது
- 17 பெப்ரவரி 2025: ஆத்திரேலியாவிற்கு அகதிகளாகத் தஞ்சமடையச் சென்ற ஈழத் தமிழர்கள் கடலில் தவிப்பு

செவ்வாய், சனவரி 7, 2014
இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டத்தில் திருக்கேதீச்சரம் பகுதியில் கடந்த சில வாரங்களாகத் தோண்டப்பட்டு வரும் மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று மேலும் ஏழு எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திருக்கேதீச்சரம் - மாந்தை வீதியில் குடிநீர்த் திட்டத்திற்காக குழாய்கள் புதைப்பதற்கு கடந்த மாதம் டிசம்பர் 20 ஆம் திகதி குழிகள் தோண்டப்பட்ட போதே மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. நேற்றுடன் மொத்தம் 32 எலும்புக்கூடுகள் உட்பட மனித உடற்பாகங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்ட நீதிபதி ஆனந்தி கனகரத்தினம் முன்னிலையில், சட்ட வைத்திய நிபுணர்கள், ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறை மாணவர்கள், உடற்கூறியல் நிபுணர், தொல்பொருளாராய்ச்சி திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் காவல்துறையினரின் பாதுகாப்புடன் புதைகுழி தோண்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதைகுழியில் இருந்து சிறுவர்களின் பற்களும் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதைகுழி உள்ள இடம் ஈழப் போர்க்காலத்தில் அதியுயர் பாதுகாப்புப் பிரதேசமாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. இப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் முழுமையாக மீள்குடியமராத காரணத்தினால் இந்தப் பகுதி பற்றைக் காடாகக் காட்சியளிக்கின்றது.
இந்த மனிதப் புதைகுழி தொடர்பில் பன்னாட்டு விசாரணை அவசியம் என மன்னார் ஆயர் இராயப்பு யோசப்பு கோரியிருக்கின்றார். நேற்று இலங்கை வந்துள்ள சர்வதேசப் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் சிறப்புத் தூதுவர் ஸ்டீவன் ராப்பின் கவனத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டு வரவுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று தெரிவித்தார்.
மூலம்
[தொகு]- மன்னார் மனிதப் புதைகுழி அமெரிக்காவின் கவனத்துக்கு; கொண்டு செல்கிறது கூட்டமைப்பு, உதயன், சனவரி 7, 2014
- திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி; இதுவரை 32 மண்டையோடுகள் மீட்பு, உதயன், சனவரி 7, 2014
- திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி! இலங்கையின் விசாரணையில் நம்பிக்கையில்லை: மன்னார் ஆயர், தமிழ்வின், டிசம்பர் 25, 2014
