உள்ளடக்கத்துக்குச் செல்

மலாவியில் அரசுத்தலைவருக்கு எதிராக ஆட்சிக் கவிழ்ப்புச் சதியில் ஈடுபட்ட பலர் கைது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், மார்ச்சு 13, 2013

ஆட்சிக் கவிழ்ப்புச் சதியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு அமைச்சர்கள் உட்படக் குறைந்தது 10 பேர் மலாவியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அரசுத்தலைவர் ஜோய்சு பண்டா

இக்கைதுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீசிக் கலைத்தனர்.


அமைச்சர் கூடால் கோண்டுவி, முன்னாள் அமைச்சர்கள் பீட்டர் முத்தாரிக்கா, ஜீன் கலிராணி, நிக்கலாசு டவுசி ஆகியோரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர். கடந்த ஆண்டு தற்போதைய அரசுத்தலைவர் ஜோய்சு பண்டா பதவிக்கு வருவதைத் தடுக்க சதி புரிந்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


முன்னாள் அரசுத்தலைவர் பிங்கு வா முத்தாரிக்கா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எதிர்பாராத விதமாக மாரடைப்பால் காலமானார். "முன்னாள் தலைவர் முத்தாரிக்காவின் இறப்புக் குறித்த அறிக்கை வெளியானதை அடுத்து, தனிப்பட்ட நபர்கள் சில குற்றச் செயல்களைப் புரிந்துள்ளதாக நம்பகரமாகத் தெரிய வந்துள்ளது. அதனை அடுத்தே இக்கைதுகள் இடம்பெற்றன," என மலாவியின் தகவல் துறை அமைச்சர் மோசசு குங்குயு தெரிவித்தார்.


இறந்த முன்னாள் தலைவரின் சகோதரர் பீட்டர் முத்தாரிக்கா, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர், தற்போதைய அமைச்சர் கொண்டுவி ஆகியோர் ஆட்சியைக் கைப்பற்றுமாறு இராணுவத்தைக் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.


அடுத்த ஆண்டு இடம்பெறவிருக்கும் அரசுத்தலைவர் தேர்தலில் பீட்டர் முத்தாரிக்கா முன்னாள் ஆளும் கட்சியான சனநாயக முற்போக்குக் கட்சியின் சார்பில் போட்டியிடவிருக்கிறார்.


மூலம்

[தொகு]