உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய இந்துராப் உறுப்பினர் மனோகரன் காவல்துறை மீது அவதூறு வழக்கு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, செப்டம்பர் 11, 2009, கோலாலம்பூர்:


மலேசியாவின் கோத்தா அலாம் ஷா சட்ட மன்ற உறுப்பினரான எம். மனோகரன், தனக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக கூறியதற்காக தேசிய போலிஸ் படைத் தலைவர், சட்டத் துறைத் தலைவர், மூன்று பத்திரிகை வெளியீட்டாளர்கள் ஆகியோர் மீது 100 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரி அவதூறு வழக்கு ஒன்றை இன்று தொடுத்துள்ளார்.


த ஸ்டார், நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், உத்துசான் மலேசியா ஆகியவையே அந்த பத்திரிகைகளாகும்.


தடை செய்யப்பட்ட இந்துராப் அமைப்பின் சட்ட ஆலோசகரும் கோத்தா அலாம் சட்டமன்ற உறுப்பினருமான மனோகரன் 2007 ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார்.


2007 நவம்பரில் கோலாலம்பூரில் இந்துராப் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம்

அந்த கைது நடவடிக்கைக்குப் பின்னர் தடுத்து வைக்கப்பட்ட இந்துராப் தலைவர்கள் ஐந்து பேருக்கும் இலங்கை தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக காவல்துறைத் தலைவர் மூசா ஹசானும் சட்டமா அதிபர் அப்துல் கனி பட்டேலும் கூறினர்.


மனோகரன் இவ்வாண்டு மே 9 இல் உள்நாட்டு பாதுகாப்பு சட்ட தடுப்புக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டார். விடுதலையான பிறகு பேசிய திரு மனோகரன், தன் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் அர்த்தமில்லாதவை என்று கூறினார். அமைதியான முறையில் மறுமலர்ச்சியை கொண்டு வருவதில் ஹிண்ட்ராப் நம்பிக்கை கொண்டிருக்கிறது. தம்மீதும் இந்துராப் மீதும் ஒரு தவறான தோற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி செய்கிறது என்று அவர் தமது ரிட் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.

மூலம்

[தொகு]