உள்ளடக்கத்துக்குச் செல்

மாலியில் இரண்டு பிரெஞ்சு செய்தியாளர்கள் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, நவம்பர் 2, 2013

பிரான்சு நாட்டின் ரேடியோ பிரான்சு இண்டர்னேசனல் (ஆர்.எஃப்.ஐ) வானொலியைச் சேர்ந்த இரண்டு செய்தியாளர்கள் மாலியின் வடக்கு நகரான கிடாலில் கடத்தப்பட்டு பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


கிலோட் வெர்லன், கிரிசுலெயின் டூப்போன் ஆகிய இருவரும் உள்ளூர் அரசியல்வாதி ஒருவரை நேர்காணல் செய்ததை அடுத்துக் கடத்தப்பட்டனர். பின்னர் இவர்களது இறந்த உடல்கள் நகருக்கு வெளியே கிடக்கக் கண்டுபிடிக்கப்பட்டன.


கொல்லப்பட்ட இரு செய்தியாளர்களும் இரண்டாவது தடவையாக மாலிக்குச் சென்றுள்ளதாக வானொலி நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த யூலை மாதத்தில் இடம்பெற்ற அரசுத்தலைவர் தேர்தல் காலத்தில் இவர்கள் மாலி சென்று திரும்பியிருந்தனர்.


இருவரும் தன்னை பேட்டி கண்டுவிட்டு வெளியே சென்றதாகவும் அதன் பின்னரே அவர்கள் கடத்தப்பட்டதாகவும் துவாரெக் இனத்தின் அசவாத் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் உள்ளூர்த் தலைவர் ஆக் ரிசா தெரிவித்தார்.


2013 ஆம் ஆண்டில் இதுவரை உலகெங்கணும் 42 செய்தியாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.


கிடால் நகரில் தற்போது 200 பிரெஞ்சுப் படையினரும், 200 ஐநா அமைதிப்படையினரும் நிலைகொண்டுள்ளனர். இவர்களுடன் உள்ளூர் மாலி படையினரும் அங்குள்ளனர்.


அயல்நாடான நைஜரில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்ட நான்கு பிரெஞ்சுப் பணியாளர்கள் இவ்வார ஆரம்பத்தில் விடுவிக்கப்பட்டனர்.


மூலம்[தொகு]