உள்ளடக்கத்துக்குச் செல்

மாலைதீவுகளின் புதிய அரசுத்தலைவராக வாகித் அசன் பதவியேற்றார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், பெப்பிரவரி 8, 2012

மாலைதீவுகளின் புதிய அரசுத்தலைவராக முகமது வாகித் அசன் பதவியேற்றார். முகமது நசீது அரசுத்தலைவர் பதவியில் இருந்து விலகியது ஒரு இராணுவப் புரட்சி எனக் கருதப்படக் கூடாது எனவும், தாம் பதவிக்கு வந்தது முன்னரே திட்டமிடப்பட்டதல்ல எனவும் அவர் கூறினார்.


புதிய தலவர் முகமது வாகித் அசன்

முன்னாள் தலைவர் முகமது நசீது தற்போது எங்கு வைக்கப்பட்டுள்ளார் எனத் தெரியவில்லை. "மூத்த நீதிபதி ஒருவரை கைது செய்தது அவர் செய்த மிகப் பெரிய தவறு" என வாகித் அசன் செய்தியாளர்களிடம் கூறினார். மத்தியில் கூட்டாட்சி அமைத்து நாட்டில் நிலையான சனநாயக ஆட்சியை அமைப்பதே தமது குறிக்கோள் என அவர் கூறினார். வாகித் அசன் முன்னாள் தலைவர் முகமது நசிதின் கீழ் பிரதி அரசுத் தலைவராக இருந்தவர்.


திரு நசீதின் வீட்டின் முன்னாள் மதுபானப் போத்தல்கள் சில கண்டெடுக்கப்பட்டமை தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திரு நசீதுக்கு எதிராகத் தாம் பழிவாங்கும் நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறாது என உறுதியளித்த வாகித் அசன் அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு எவ்விதத் தடையும் இல்லை எனக் கூறினார்.


நீதிபதி அப்துல்லா முகமது என்பவர் சென்ற மாதம் கைது செய்யப்பட்டமை தொடர்பாக நாட்டில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதை அடுத்து முகமது நசீது தாம் பதவி விலகுவதாக நேற்று அறிவித்தார். புதிய தலைவர் பதவிக்கு வந்தததும் நீதிபதி அப்துல்லா முகமது சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். 2013 ஆம் ஆண்டில் நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடத்தப்படும் எனவும் புதிய தலைவர் உறுதியளித்தார்.


59 வயதான வாகித் அசன் கலிபோர்னியா, ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். மாலைதீவில் முதலாவது கலாந்திப் பட்டம் பெற்றவர் இவரே. நாட்டின் உயர் கல்வி அதிகாரியாக விளங்கிய அசன் பின்னர் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். பின்னர் யூனிசெப் நிறுவனத்தில் சேர்ந்த அவர் ஆப்கானித்தான் சென்று அங்கு பாடசாலைகள், மற்றும் சுகாதார நிறுவனங்களை நிறுவி சேவையாற்றினார்.


தொடர்புள்ள செய்தி

[தொகு]

மூலம்

[தொகு]