முகமது நபிகள் குறித்த திரைப்படம் உருவாகிறது
புதன், நவம்பர் 4, 2009
முகமது நபிகளின் வாழ்க்கை வரலாறு குறித்து 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிலான ஒரு பிரம்மாண்டமான திரைப்படத்தை தயாரிக்கும் ஒரு திட்டம் செல்வந்த அரபு நாடாகிய கட்டாரில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
லார்ட் ஆப் தி ரிங்ஸ், மேட்ரிக்ஸ் போன்ற படங்களை தயாரித்த பேரி ஒஸ்போர்ன், ஆங்கில மொழியில் வெளியாகவுள்ள இப்படத்தை தயாரிக்கவுள்ளார்.
இசுலாம் குறித்து மக்களுக்கு அறிவூட்டுவதுவும், மேற்கத்திய நாடுகளில் நபிகள் நாயகம் குறித்து நிலவும் தவறான புரிதல்களைப் போக்குவதும் இதன் முக்கிய நோக்கமாக இருக்கும் என்று இந்த படத்தின் பின்னணியில் இருக்கும் கதாரி ஊடக நிறுவனம் கூறுகிறது.
இந்தப் படத்துக்கான கதை 2010 ஆம் ஆண்டு தயாராகும் என்றும் 2011 இல் படப்பிடிப்பு துவங்கும் என்றும் இந்தப் படத்துக்கு பண முதலீடு செய்யவுள்ள கட்டார் ஊடக நிறுவனம் அல்நூர் ஹோல்டிங்ஸ் கூறுகிறது.
நபிகள் நாயகத்தை உருவகப்படுத்திக் காட்டக் கூடாது என்று இஸ்லாமிய இறை நம்பிக்கைகள் கூறுவதால் இந்தப் படத்தை தயாரிப்பது பெரும் சவாலாக இருக்கும் என்று இதன் அமெரிக்க தயாரிப்பாளர் பேரி ஒஸ்போர்ன் கூறியுள்ளார்.
மூலம்
- "Epic Muhammad movie in pipeline". பிபிசி, நவம்பர் 2, 2009