முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களில் 483 பேர் விடுதலை

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஏப்பிரல் 24, 2011

இலங்கையின் 2009 இறுதிப் போரின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களில் 483 பேர் சனிக்கிழமை அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளனர். வவுனியாவிலுள்ள புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களில் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு மேலுள்ள 483 முன்னாள் விடுதலை புலி போராளிகள் குடும்பத்தினருடன் இணைக்கப்பட்டனர்.


அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படும் முன்னாள் விடுதலை புலிப் போராளிகளுக்கு அரசாங்கத்தினால் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார். புனர்வாழ்வளிக்கப்பட்ட 483 முன்னாள் விடுதலை புலி போரளிகளை விடுதலை செய்யும் நிகழ்வு வவுனியா கலாசார மண்டபத்தில் சனிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் கீழுள்ள ரெபியா நிறுவனத்தின் ஊடாக வட மாகாணத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 1,000 புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போரளிகளுக்கு 250,000 ரூபா வரையான சுயதொழில் கடன் வழங்கவுள்ளதாகவும், குறித்த கடன் திட்டம் மே மாத நடுப்பகுதியில் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் முன்னாள் விடுதலைப் புலிகளின் புனர்வாழ்வுக்கென அரசாங்கம் மாதாந்தம் 100 மில்லியன் ரூபா செலவு செய்து வந்ததாகவும், புனர்வாழ்வு நிலையங்களில் எஞ்சியுள்ளவர்களுக்கென மாதாந்தம் 50 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில் இன்னும் புனர்வாழ்வு நிலையங்களில் எஞ்சியிருப்பவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களது குடும்ப உறவினர்கள் பலர் அமைச்சர் சந்திரசிறி கஜதீரவைச் சந்தித்து மனுக்கள் கையளித்து கோரிக்கை விடுத்தனர். புனர்வாழ்வு பயிற்சிகள் முடிவடைந்ததும் அவர்களும் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் என அவர்களிடம் உறுதியளித்த அமைச்சர், விடுதலை பெற்றுச் செல்பவர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தாமல், நாட்டை முன்னேற்றுவதற்கான அபிவிருத்திப் பாதையில் செல்லவேண்டும் என கேட்டுக் கொண்டார். புனர்வாழ்வு பயிற்சியை முடித்துக்கொண்ட ஏழாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.


மூலம்[தொகு]