முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 1800 பேர் விடுதலை

விக்கிசெய்தி இலிருந்து

சனி, அக்டோபர் 1, 2011

இலங்கையில் புனர்வாழ்வுப் பயிற்சி பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 1800 பேர் நேற்று விடுவிக்கப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டனர். இந்நிகழ்வு இலங்கை அரசுத்தலைவரின் அதிகாரபூர்வ இல்லமான அலரி மாளிகையில் இடம்பெற்றது. பெற்றோர்களிடம் பிள்ளைகளை ஒப்படைத்த அரசுத்தலைவர் அவர்களின் எதிர்கால வளமான வாழ்வுக்காக வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.


இங்கு நடைபெற்ற விழாவில் பேசிய சனாதிபதி மகிந்த ராஜபக்ச, "குறுகிய காலத்துக்குள் புனர் வாழ்வளிக்கப்பட்ட சுமார் பத்தாயிரம் பேரை சமூகத்துடன் இணைத்துள்ளோம். வடக்கு, கிழக்கு, தெற்கு பேதமின்றி அனைத்து தரப்பினரும் ஒன்று சேரும் தருணம் வந்துள்ளதுடன் அனைத்து நாடுகளுக்கும் முன் உதாரணமாக இலங்கை விளங்குகின்றது. எஞ்சியவர்களும் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்படுவர் விடுவிப்பது தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.


இலங்கையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற போர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தது. போர் முடிந்த சில மாதங்களுக்குப் பிறகு போரின் இறுதி கட்டத்தில் 11,600 க்கும் சற்று அதிகமான விடுதலைப் புலிகள் தம்மால் பிடிக்கப்பட்டார்கள் அல்லது சரணடைந்தார்கள் என்று அரசு அறிவித்தது. தடுப்பில் வைக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு பயிற்சிகளை அளித்து அவர்களை கட்டம் கட்டமாக அரசு விடுவித்து வந்தது. வழக்குகளை எதிர்கொள்ளும் 63 பெண்கள் உள்ளிட்ட சுமார் 1400 போராளிகளே தற்போது தடுப்பில் இருப்பதாகவும் அவர்களையும் விரைவாக விடுவிக்க அரசு முயற்சி மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மூலம்[தொகு]