மூலவுயிர்க்கலங்களைப் பயன்படுத்தி தாடை எலும்பு உருவாக்கம்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, அக்டோபர் 11, 2009, ஐக்கிய அமெரிக்கா:


மனித மூலவுயிர்க் கலத்தைப் பயன்படுத்தி தாடை எலும்பு இணைப்பின் பாகமொன்றை ஆய்வு கூடத்தில் உருவாக்கி அமெரிக்க அறிவியலாளர்கள் சாதனை படைத்துள்ளனர். சிக்கல் மிகுந்த உடலுறுப்பின் பாகமொன்று இயற்கையான அளவை ஒத்ததாக உருவாக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.


கொலம்பியா பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவு தேசிய அறிவியல் கல்வியக ஆய்வேட்டில் (Proceedings of the National Academy of Sciences) வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில் நுட்பமானது தாடை எலும்பு இணைப்புகளிலான ஒழுங்கீனங்களுக்கு சிகிச்சை அளிக்கவும் தாடை எலும்பிலான பிரச்சினைகளை சீர் செய்யவும் பயன்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


பிறப்பில் தாடை எலும்பில் ஏற்படும் குறைபாடுகள், காயங்கள், வலிகள் என்பனவற்றுக்கு சிகிச்சையளிப்பதற்கு வரப்பிரசாதமாக இந்த மருத்துவ தொழில் நுட்பம் பயன்படும்.

—முனைவர் கோர்டானா வுன்சாக்-நொவாகொவிச், கொலம்பியா பல்கலைக்கழகம்

பிறப்பில் தாடை எலும்பில் ஏற்படும் குறைபாடுகள், காயங்கள், வலிகள் என்பனவற்றுக்கு சிகிச்சையளிப்பதற்கு வரப்பிரசாதமாக இந்த மருத்துவ தொழில் நுட்பம் பயன்படும் என இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய முனைவர் கோர்டானா வுன்சாக்-நொவாகொவிச் தெரிவித்தார்.


இந்த ஆய்வுக்காக மனித எலும்பு மச்சையிலிருந்து மூலவுயிர்க்கலங்கள் பெறப்பட்டு நோயாளியொருவரின் தாடை தொடர்பான இலத்திரனியல் விம்பங்களுக்கேற்ப தாடை இணைப்புகள் விருத்தி செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.


மூலம்