உள்ளடக்கத்துக்குச் செல்

மெல்பேர்ணில் தீவிரவாதிகளைத் தேடி வேட்டை

விக்கிசெய்தி இலிருந்து
மெல்பேர்ண் நகரம்

செவ்வாய், ஆகத்து 4, 2009


ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் ஆஸ்திரேலிய நடுவண் அரசின் காவல்துறையினர் மாநில அரசுடன் இணைந்து இன்று அதிகாலை நடத்திய தேடுதல் வேட்டையில் நான்கு தீவிரவாத சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஆஸ்திரேலியாவில் இராணுவ நிலைகளின் மீது தற்கொலைத் தாக்குதல்களை நடத்துவதற்குத் திட்டமிட்டார்கள் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற சோமாலியா மற்றும் லெபனானைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.


மெல்பேர்ணில் நிலைகொண்டிருந்த இத்தீவிரவாதிகள் சோமாலியாவில் இடம்பெற்ற தாக்குதல்கள் சிலவற்றிலும் சம்பந்தப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கைதானவர்கள் 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். அவர்கள் பின்னர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


"இவர்களின் முக்கிய இலக்கு சிட்னியில் உள்ள ஹோல்ஸ்வேர்தி என்ற முக்கியமான இராணுவத் தளம் என்றும் அதன் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தி அதிகபடியான இராணுவத்தினரைக் கொல்லுவதே நோக்கம்" என்றும் ஆஸ்திரேலிய நடுவண் அரசுக் காவல்துறை உதவி கமிசனர் டொனி நெகஸ் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். "தீவிரவாதிகளுக்கெதிரான இன்றைய நடவடிக்கை மூலம் பெரும் உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கிறோம்" என அவர் மேலும் தெரிவித்தார். ஹோல்ஸ்வேர்தி முகாம் சிட்னி மாநகரின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான துருப்புக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அங்கு தீவிரவாத தடுப்புப் பிரிவும் இயங்குகிறது.


இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பயங்கரவாத மிரட்டல் இருப்பதை நினைவுபடுத்துகிறது என்று ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரட் கூறினார். ஆஸ்திரேலியர்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதையும் அது உணர்த்தியிருப்பதாக அவர் சொன்னார்.


இன்றைய நடவடிக்கையில் கைது செய்யப்பட்டோர் அலி-சகாப் என்ற சோமாலியத் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படுகிறது. சோமாலிய அரசைக் கவிழ்ப்பது இவ்வமைப்பின் குறிக்கோள் ஆகும். அத்துடன் இதற்கு அல்-கைடா அமைப்புடனும் தொடர்புகள் உண்டென காவல்துறையினர் தெரிவித்தனர்.


இன்றைய நடவடிக்கையில் நானூறுக்கும் அதிகமான காவல்துறையினர் கலந்து கொண்டனர். இத்தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை கடந்த ஜனவரி மாதம் முதல் காவல்துறையினர் கண்காணித்து வருவதாகவும், இது ஆஸ்திரேலிய வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய காவல்துறை நடவடிக்கை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மூலம்

[தொகு]