உள்ளடக்கத்துக்குச் செல்

மேற்கு சகாராவில் மொரோக்கோ தாக்குதல், பலர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், நவம்பர் 9, 2010

மேற்கு சகாராவில் இருந்து ஏனைய செய்திகள்
மேற்கு சகாராவின் அமைவிடம்

மேற்கு சகாராவின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

சர்ச்சைக்குரிய மேற்கு சகாராப் பகுதியில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றின் மீது மொரோக்கோ பாதுகாப்புப் படைகள் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டனர்.


மேற்கு சகாரா

மேற்கு சகாராவில் மொரோக்கோவின் 35 ஆண்டு கால ஆக்கிரமிப்பை எதிர்த்து அப்பகுதியின் தலைநகர் லாயோனில் பல ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இத்தாக்குதலில் பல பொதுமக்கள் காயத்துக்குள்ளாயினர்.


இப்பிரதேசத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய பேச்சுவார்த்தைகள் ஐக்கிய அமெரிக்காவில் ஆரம்பிப்பதற்கு சற்று முன்னதாக இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.


தலைநகர் லாயோனுக்கு வெளியே இடம்பெயர்ந்த சாராவி மக்களினால் எதிர்ப்பு முகாம் ஒன்று கடந்த மாதம் அமைக்கப்பட்டது. இதில் தற்போது 12,000 இற்கும் அதிகமானோர் தங்கியுள்ளனர். இம்முகாம் மீதே மொரோக்கோப் படையினர் தாக்குதலை மேற்கொண்டனர்.


அதிகாலையில் முகாமிற்குள் புகுந்த படையினர் உலங்கு வானூர்தி மூலமும், தண்ணீர்க் குழாய்கள் மூலமும் அங்கிருந்தோரை வெளியேற்ற முயற்சித்ததாக பிபிசி செய்தி தெரிவிக்கிறது.


ஐந்து படையினர் கொல்லப்பட்டதாக மொரோக்கோ அதிகாரிகள் தெரிவித்தனர்.


முன்னாள் இசுப்பானிய குடியேற்ற நாடான மேற்கு சகாரா ஆப்பிரிக்காவின் நீண்ட கால சர்ச்சைக்குரிய பிரதேசமாக இருந்து வந்துள்ளது. பொசுப்பேற்று வளமிக்க இப்பகுதி 1975 ஆம் ஆண்டில் இசுப்பானியர்கள் நாட்டை விட்டு வெளியேறியதும் மொரோக்கோவினால் ஆக்கிரமிக்கப்பட்டது. 1991 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் உதவியுடன் போர்நிறுத்தம் அறிவிக்கப்படும் வரையில் அங்கு கரந்தடிப் போரை பொலிசாரியோ முன்னணி மொரோக்கோ படைகளுக்கு எதிராக நடத்தி வந்தது.


இப்போது மொரோக்கோ இப்பகுதிக்கு சுயாட்சி வழங்க ஒத்துக் கொண்டாலும், முழுமையான விடுதலை கோரி பொலிசாரியோ போராடுகிறது.


மூலம்

[தொகு]